
posted 20th September 2021
மன்னார் மாவட்டத்தில் ஞாயிறு (19.09.2021) அன்று ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் இதுவரை 2035 கொரோனா தொற்றாளர்களாக பதிவாகியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதனின் அறிக்கை தெரிவித்துள்ளது.
பணிப்பாளர் த.வினோதன் நாளாந்தம் வெளியிடும் கொரோனா தொடர்பான அறிக்கையில் மன்னார் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை மேலும் 07 நபர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு
மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். மற்றும் அன்ரிஜென் பரிசோதனையிலேயே இவ்களின் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இதுவரை மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 2035 கொரோனா தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளதுடன், இம் மாதம் (செப்ரம்பர்) கொரோனா தொற்றாளர்களாக 351 பேர் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும். கொரோனா தொற்றால் மரணித்தவர்கள் 23 ஆகவும் பதிவாகியுள்ளது.
இம் மாதம் (செப்ரம்பர்) எடுக்கப்பட்ட 1024 பி.சீ.ஆர். பரிசோதனையுடன் மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 28,784 பி.சீ.ஆர் பரிசோதனைகளிலேயே 2035 கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது.

வாஸ் கூஞ்ஞ