
posted 9th September 2021
கொவிட் 19 தொற்று நோயாளர்களாக மன்னார் மாவட்டத்தில் செவ்வாய் கிழமை (07.09.2021) 31 பேர் இனம் காணப்பட்டுள்ளனர் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகளிலிருந்து 31 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக செவ்வாய் கிழமை (07) உறுதி செய்யப்பட்டுள்ளனர் எனவும், இதில் இங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனையில் கடற்படையைச் சேர்ந்த ஒருவரும், அன்ரிஜன் பரிசோதனையில் 30 நபர்களும் கொரோனா தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.
அன்ரிஜன் பரிசோதனையில் மன்னார் பொது வைத்தியசாலையில் 02 பேரும், முருங்கன் ஆதார வைத்தியசாலையில் 06 நபர்களும். அடம்பன் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேரும், தலைமன்னார், விடத்தல்தீவு, வங்காலை, சிலாவத்துறை ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளில் தலா ஒருவரும் மன்னார் பொது சுகாதார சேவைகள் அதிகாரி பிரிவில் 15 பேரும், மாந்தை மேற்கு பகுதியில் ஒருவரும் மொத்தமாக 31 பேரே இந்நாளில் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் என பணிப்பாளர் த. வினோதன் தனது நாளாந்த கொரோனா தொடர்பான அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றாளர்களாக 1823 ஆக உயர்ந்துள்ளது எனவும். செப்டம்பர் (2021) மாதம் பி.சீ.ஆர். 459 பேருக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இம் மாதம் இதுவரை 139 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர் எனவும், இதுவரை மன்னார் மாவட்டத்தில் 28,219 பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் செவ்வாய் கிழமை (07) 140 நபர்களுக்கு பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரை முதலாவது தடுப்பூசி 62,650பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 55,511 பேருக்கும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ