
posted 20th September 2021
அரியாலை பூம்புகார் பகுதியில் சனிக்கிழமை இரவு இடம் பெற்ற குடும்பத்தலைவர் கொலையுடன் தொடர்புடைய மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் பொலிஸாரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலை செய்யப்பட்டவரது மனைவியுடன் தொடர்புடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவரின் மனைவி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவியுடன் அவருக்கு இருந்த தொடர்பு தொடர்பில் எழுந்த பிரச்சினைதான் குடும்பத்தலைவரை கொலை செய்யும் முடிவுக்கு கொண்டு சென்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரும் இணைந்தே குடும்பத்தலைவரை கொலை செய்துள்ளனர் என்றும் ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் அச்சுவேலி தெற்கைச் சேர்ந்தவரும் பூம்புகாரில் வசித்து வருபவருமான துரைராசா செல்வக்குமார் (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.
அவர் திருவலை கட்டளையால் கடுமையாகத் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸாரின் விசாரணைகளைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார்.
சடலத்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
கொல்லப்பட்டவரின் மனைவியான 28 வயதுடைய பெண் மற்றும் அவருடன் தொடர்பை வைத்திருந்த 28 வயதுடைய ஆண் ஒருவரும் யாழ்ப்பாணம் குற்றப் பிரிவு பொலிஸாரின் தடுப்பில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்