
posted 7th September 2021
பி. சி. ஆர். எடுப்பதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், காரைநகர் சுகாதார மருத்துவ அதிகாரியையும் தாக்க முயன்ற குற்றச்சாட்டில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் காலை காரைநகர் மருத்துவ அதிகாரி பிரிவு பணிமனையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது,
காரைநகர் மருத்துவ அதிகாரி பிரிவில் அண்மையில் சட்டம், சுகாதார விதிகளை மீறி அதிகளவானோரின் பங்கேற்புடன் திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இதுபற்றி முகநூலில் பகிரப்பட்ட படங்களில் எவரும் முகக்கவசம் - சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை வெளிப்பட்டது. இதையடுத்து திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று அவர்களுக்கு பி. சி. ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது. இதன்போது ஒருவர் ஒத்துழைக்க மறுத்தார். இந்த நிலையில், அவரின் மகன்கள் இருவர் அந்த இடத்தில் நின்ற காரைநகர் மருத்துவ அதிகாரியை தாக்க முயன்றனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பி. சி. ஆர். பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்தமை, மருத்துவ அதிகாரியை தாக்க முயன்றமை, பொது இடத்தில் குழப்பம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன்