நாளை ஊரடங்கு தளர்வு
நாளை ஊரடங்கு தளர்வு

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா

கொவிட் - 19 வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில், இலங்கையில் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நாளை வெள்ளிக்கிழமை (01.10.2021) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குறித்த ஊரடங்குச்சட்டத்தைத் தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபயராஜபக்ஷ பணித்துள்ளதாக கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் பிரதானியும் இராணுவத்தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி தொடக்கம் (சுமார் 43 தினங்கள்) நடைமுறையிலுள்ள இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தைத் தளர்த்தி நாட்டைத் திறக்குமாறே பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கடுமையான சுகாதாரக்கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாடு திறக்கப்பட்டாலும் கடுமையான சுகாதாரக்கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும், இன்னமும் நாடு கொவிட் - 19 சிவப்பு எச்சரிக்கையிலிருந்து விடுபடவில்லையெனவும் சுகாதார மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

மேலும் கொவிட் - 19 வைரஸ் பரவலின் வீரியமிக்க காலகட்டம் நிறைவடைந்து வருவதாக, சிறீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப்பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்த நம்பிக்கையூட்டும் தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.

எனினும் தற்போது நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டு நாட்டைத்திறந்தவுடன் சகல செயற்பாடுகளுக்கும் இடமளிக்கக் கூடாது என பொதுச் சுகாதாரப்பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளதுடன்,
குறிப்பாக சுற்றுலாவுக்காக நாடு திறக்கப்படுமாயின் நெருக்கடி நிலமைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளது.

தவிரவும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு நாடு திறக்கப்படும் தகவலறிந்த பொது மக்களிடையே பெரும் மகிழ்ச்சிப் பிரவாகத்தை அவதானிக்க முடிகின்றது.

ஊரடங்குச் சட்ட காலத்திலும் வெளிநடமாட்டங்களைக் குறைத்துக்கொள்ளாத பொது மக்களின் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் இன்று வியாழக்கிழமை அதிகரித்துக்காணப்பட்டது.

பிரதேசங்களின் உள்ளுர் மற்றும் பிரதான வீதிகளில் இந்த நிலமையைக் காணமுடிந்ததுடன், வர்த்தக நிலையங்கள் திறந்து வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதையும் காண முடிந்தது.

என்னதான் ஊரடங்குச் சட்டமோ இது? எனப்பலரும் சலித்துக்கொண்டனர்.

நாளை ஊரடங்கு தளர்வு

ஏ.எல்.எம்.சலீம்