
posted 16th September 2021

மூத்த எழுத்தாளர் நந்தனி சேவியர்
சிறுகதைத் துறையின் ஊடாக புகழ்பெற்று விளங்கிய இலங்கையின் மூத்த எழுத்தாளர் நந்தனி சேவியர் தமது 72வது வயதில் திருகோணமலையில் காலமானார்.
கடந்த சில நாட்களாக காய்ச்சால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானார்.
யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவிலை பிறப்பிடமாக கொண்ட அவர், தமது ஆரம்ப கல்வியை மட்டுவில் கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலை, மட்டுவில் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதிரி திரு இருதயக் கல்லூரி ஆகியவற்றில் கற்றார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிப சங்க இயக்கத்தில் இணைந்து செயற்பட்ட அவர் இலக்கியத்துறை மற்றும் சமூகச் செயற்பாடுகளிலும் முன்நின்று செயற்பட்டவராவார்.
1967 ஆம் ஆண்டும் எழுத்துத் துறையில் தடம்பதித்த அவர் கவிதை, சிறுகதை, நாவல், பத்தி, விமர்சனக்கட்டுரை ஆகிய துறைகளில் தமது ஆளுமையைச் செலுத்தியுள்ளார்.
இவருடைய படைப்புக்கள் தாயகம், மல்லிகை, வாகை, அலை, புதுசு, இதயம், ஒளி,சிந்தாமணி, வீரகேசரி, தொழிலாளி, சுதந்திரன், ஈழமுரசு, ஈழநாடு ஆகிய சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.

எஸ் தில்லைநாதன்