சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூன்று தினங்களில் 7500 பேருக்கு தடுப்பூசி
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூன்று தினங்களில் 7500 பேருக்கு தடுப்பூசி

டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் கொவிட்-19 தடுப்பூசியேற்றும் நடவடிக்கை கடந்த 03 தினங்களாக 04 நிலையங்களில், கிராம சேவகர் பிரிவு அடிப்படையில் மேற்கொண்டு வந்த நிலையில், கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகள் நேற்றுடன் முடிவுற்றிருப்பதால் தற்காலிகமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது என சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டியதாலேயே இவ்வாறு குறுகிய காலத்தினுள் தடுப்பூசிகள் முடிவுற்றுள்ளன.

எவ்வாறாயினும் சாய்ந்தமருது 06ஆம், 13ஆம் மற்றும் 17ஆம் பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கும் பொதுவாக இப்பிரதேசத்தில் தடுப்பூசி பெற தவறியவர்களுக்குமான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மிக விரைவில் இடம்பெறும்.

அதற்கான கால, நேர, இடங்கள் பற்றிய விபரங்கள் பொது மக்களுக்கு அறிவிக்கப்படும். என்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 03 தினங்களிலும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மொத்தமாக 7500 பேர் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்கள் தலைமையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஆளணியினர் உள்ளிட்ட வைத்திய அதிகாரி பணிமனை மேற்கொண்டிருந்த நேர்த்தியான ஏற்பாடுகளுடன் இப்பிரதேசத்தில் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதையிட்டு பொது மக்கள் பாராட்டுத் தெரிவிக்கினறனர்.

இச்சிறப்பான ஒழுங்குபடுத்தல் காரணமாக நெரிசல், கால தாமதம் எதுவுமின்றி ஒவ்வொருவரும் சில நிமிடங்களுக்குள்ளேயே தடுப்பூசியைப் பெற்று வீடு திரும்பியதை அவதானிக்க முடிந்தது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூன்று தினங்களில் 7500 பேருக்கு தடுப்பூசி

ஏ.எல்.எம்.சலீம்