
posted 2nd September 2021

யூ.எல்.முஹைதீன் பாவா
முஸ்லிம் சமூகத்தின் மீதும் தேசத்தின் மீதும் நேசம் கொண்டு அதற்காக முழு மூச்சுடன் இறுதி வரை தன்னை அர்ப்பணித்து செயலாற்றிய யூ.எல்.முஹைதீன் பாவா எனும் பெருத்த சமூகப் பற்றாளனின் மறைவு பேரிழப்பாகும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் முன்னாள் செயலாளரும் ஊடக செயற்பாட்டாளருமான யூ.எல்.முஹைதீன் பாவா திங்கட்கிழமை (30) காலமானார். இவரது மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே அலிஸாஹிர் மௌலானா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
தன் ஆயுளின் பெரும்பகுதியை சமூகப் பணிகளுக்காக அர்ப்பணித்து செயற்பட்ட ஒரு சமூக ஆர்வலனின் மரணம் மனதை மிகவும் நெருடச் செய்கிறது. எந்த ஒரு சமூகப்பணியிலும் முன்னின்று செயற்பட்ட ஒரு உண்மையான களச் செயற்பாட்டாளானாக இவரை அடையாளப்படுத்திட முடியும். ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு, ரிபாய் பள்ளிவாசல், பாலர் பாடசாலை, கிராம அபிவிருத்தி சங்கம், கலை, இலக்கிய அமைப்பு, விளையாட்டுக் கழகம் போன்றவற்றில் இவரது அர்ப்பணிப்பான வகிபாகத்தை அடுக்கி கொண்டே போகலாம்.
அரசியல் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும், அரசியலுக்கு அப்பாலான உறவினை பேணுவதில் முன்னிற்பவர், எந்த வேளையிலும் குரோத உணர்வுடன் அவர் செயலாற்றியதை கண்டதில்லை, எப்போதும் இன முகத்துடன் உறவாடும் ஒருவராக இருந்து வந்ததுடன் தனிப்பட்ட வகையில் அரசியல் சமூக ரீதியாக தன் அனுபவத்தையும் ஆலோசனைகளையும் நட்புடன் பகிர்ந்து கொள்ளும் ஒரவராக காணப்பட்டார்.
சமூகப் பிரச்சனைகள், பிரதேச அபிவிருத்தி மற்றும் அரசியல் இருப்பு, இன நல்லுறவு என்று எல்லா விடயங்களிலும் எப்போதுமே தன் கரிசனையினை வெளிப்படுத்தி நிற்பார். அவர் எல்லாத் தருணங்களிலும் தைரியம், தன்னம்பிக்கையுடன் செயலாற்றக் கூடியவராக பரிணமித்தார். கொவிட் மூலமாக மரணிக்கும் முஸ்லிம்களது ஜனாசாக்கள் எரிக்கப்பட்டபோது மிகக் கவலை கொண்ட ஒருவராக, எனது போராட்டத்திற்கு உத்வேகம் கொடுத்து வந்தார்- எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்