
posted 10th September 2021

கிழக்கிலங்கையில் இயங்கிவந்து இன்றைய பொது ஜன பொரமுன அரசு ஆட்சிக்கு வந்ததும் மூடப்பட்ட லங்கா சதொச கிளைகளை (விற்பனை நிலையங்கள்) மக்கள் நலன் கருதி மீளவும் திறப்பதற்கு ஆவன செய்யுமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் - 19 வைரஸ் பரவல் அனர்த்த நிலையில் பொது மக்கள் அத்தியாவசியப் பொருட்களை நிர்ணயிக்கப்பட்ட நியாய விலையிலும், தட்டுப்பாடின்றியும் பெற்றுக்கொள்ளும் வகையில் லங்கா ச.தொ.ச. வின் சேவைகள் தற்சமயம் முக்கியமாக அமைந்துள்ளன.
கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் கடந்த நல்லாட்சி அரசின் பொது பல லங்கா ச.தொ.ச கிளைகள் ஆரம்பிக்கப்பட்டு மக்களுக்குப் பெரும் சேவையாற்றிவந்தன.
ஆனால் இன்றைய பொது ஜனபெரமுன அரசு ஆட்சிக்கு வந்ததும் மேற்படி மாவட்டங்களில் அதுவும் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் இயங்கிவந்த பல ச.தொ.ச. கிளைகள் மூடப்பட்டன.
தமிழ் பேசும் மக்களுக்கு காதிலே பூசுற்றும் வகையில், இக்கிளைகள் வியாபாரமின்றி நஷ்டத்தில் இயங்குவதால் மூடுவதாகவும் அப்போது கூறப்பட்டது. ஆனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் கவனம் கொள்ளப்படவில்லை.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் - 19 வைரஸ் பரவல் அனர்த்த நிலையில் லங்கா ச.தொ.ச வின் சேவைகளை அரசாங்கம் அத்தியாவசிய சேவையாகவே பிரகடனப்படுத்தியுள்ளது.
எனவே, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் இயங்கி வந்து இன்றைய அரசால் மூடப்பட்ட சகல லங்கா ச.தொ.ச கிளைகளையும் மீளத்திறந்து மக்களுக்கு இந்த இக்கட்டான கால கட்டத்தில் சேவையாற்ற சம்பந்தப்பட்டவர்கள் ஆவன செய்ய வேண்டுமென வலியுறுத்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இதே வேளை சுமார் 15 வருடங்களுக்கு மேல் இயங்கி வந்ததும், மேற்படி ச.தொ.ச கிளைகள் இழுத்து மூடப்பட்ட போது சேர்த்து மூடப்பட்ட நிந்தவூர் ச.தொ.ச கிளையை உடன் மீளவும் திறக்க ஆவன செய்யுமாறு நிந்தவூர் பிரதேச சபை, வர்த்தக அமைச்சருக்க மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் நிறைவேற்றப்பட்ட ஏகமனதான தீர்மானம் ஒன்றுக்கு அமைய இந்த மகஜர் அனுப்பப்பட்டுள்ளதாக தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார்.

எ.எல்.எம்.சலீம்