கைதிகளை அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சரின் செயற்பாடு அபாயகரமான சமிக்ஞையாகும் - நீதி நடவடிக்கை அவசியம் - ஹென்ரி
கைதிகளை அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சரின் செயற்பாடு அபாயகரமான சமிக்ஞையாகும் - நீதி நடவடிக்கை அவசியம் - ஹென்ரி

ஹென்ரி மகேந்திரன்

“அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் கைத்துப்பாக்கியுடன் உட்புகுந்து தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் செயற்பாடு அபாயகரமான சமிக்ஞையாகும். அவரிடமிருந்து சகல அமைச்சுப் பொறுப்புக்களும் பறிக்கப்பட்டு அவர் நீதி நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.”

இவ்வாறு கல்முனை மாநகரசபையின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்ரி மகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர் வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக இருந்த நிலையில், அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் கைத்துப்பாக்கியுடன் உட்புகுந்து தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் விவகாரம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் ஹென்ரி மகேந்திரன் தமது கண்டன அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

“அனுராதபுரம் சிறைச்சாலையில் சம்பந்தப்பட்ட இராஜாங்க அமைச்சரால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் மீதான அச்சுறுத்தல் விவகாரம் வன்மையான கண்டனத்திற்குரியதும், விசனிக்கத்தக்கதுமாகும்.

இதனைக் கீழ்த்தரமான அடாவடிச் செயலாகவே கருதி வேண்டியுள்ளதுடன், இன்றைய ஆட்சியினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ள செயலுமாகும்.
இவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து லொஹான் ரத்வத்தை வகித்து வந்த சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு பதவியை மட்டும் இராஜினாமாச் செய்துள்ளார்.

ஆனால் அவர் வகித்து வந்த மேலும் சில பொறுப்பு இராஜாங்க அமைச்சுகளிலிருந்து அவர் விலகவில்லை இது கண்துடைப்பு செயற்பாடாகும்.
எனவே, அவரிடமுள்ள சகல துறை அமைச்சுப் பொறுப்புக்களிலிருந்தும் அவரை நீக்கி விட்டு சம்பவம் தொடர்பில் நீதி விசாரணைகள் முன்னெடுக்ப்படுவதற்கு அரசு உடன் ஆவன செய்ய வேண்டும்.

உரிய நியதிகளுக்கமைய இந்த மிலேச்சத்தன, செயற்பாட்டில் ஈடுபட்ட லொஹான் ரத்வத்தையைக் கைது செய்து மேற்கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவும் வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகளை அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சரின் செயற்பாடு அபாயகரமான சமிக்ஞையாகும் - நீதி நடவடிக்கை அவசியம் - ஹென்ரி

எ.எல்.எம்.சலீம்