குவியும் வாழ்த்துக்கள்!
குவியும் வாழ்த்துக்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்

நாடாளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்திற்காகக் குரல் கொடுத்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு பெரும் பாராட்டும், நன்றிகளும் குவிந்த வண்ணமுள்ளன. குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள், பொது மக்கள் உணர்வு பொங்க நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு தமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

முஸ்லிம் சமூகத்தின் குரலாக ஒலிக்க வேண்டிய முஸ்லிம் பிரதி நிதிகள் வாய் மூடி மௌனிகளாக இருக்கும் போது சகோதர சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்திற்காக, நாடாளுமன்றத்தில் வெகுண்டெழுந்து சகோதர வாஞ்சையுடன் குரல் கொடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர், சாணக்கியன் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இரா.சாணக்கியன், முஸ்லிம்களின் மனம் புண்படும் வகையில், அல்லாஹ்வை இழுத்து பொது பலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசாரதேரர் வெளியிட்ட படுதுவேசக் கூற்றுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

“ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி அல்லாஹ்தான்” என்ற கலகொட அத்தே ஞானசாரதேரரின் கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாக நாடாளுமன்றத்தில் அடித்துக் கூறிய சாணக்கியன், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அஸாத்சாலி போன்றோர் பேசினால் இனவாதம் என முத்திரை குத்துவோர், ஞானசாரர் பேசியதை என்ன வாதமாகக் கூறுவரோ எனவும் இடித்துக் கேள்வி எழுப்பினார்.

இந்த தேரரின் கருத்து தொடர்பில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காப்பது ஏன் எனவும் புட்டுக்காட்டி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தவும் அவர் தவறவில்லை.

நமது “தேனாரம்;” இணையம் (www.thaenaaram.com) கடந்த 23 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் இந்த நாடாளுமன்ற உரை தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நாடாளுமன்றத்தில் சிலரது கூச்சலுக்கு மத்தியிலும் ஆணித்தரமாக் குரல் கொடுத்த சாணக்கியனின் உரை கிழக்கில் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தவர் மத்தியில் பெருவரவேற்பைப் பெற்றுள்ளது.

பெருமளவான முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் தமது முக நூல்களில் நாடாளுன்ற உறுப்பினரின் முஸ்லிம்கள் சார்ந்த உரையை வரவேற்றும், விதந்து பாராட்டியும் பதிவுகளை இட்டு நன்றி பகர்ந்துள்ளதுமட்டுமன்றி, பெருமளவானோர் தொலைபேசி மூலமும், நேரிலும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

சிறுபான்மை சமூகத்தின் விடிவெள்ளி, வீரத்தமிழன், போன்ற வசனங்களுடன் அவரை விழித்தும் முஸ்லிம் இளைஞர்கள் தமது முகநூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளரும், சிரேஷ்ட முஸ்லிம் அரசியல் வாதியுமான எம்.ரி.ஹஸனலி, முஸ்லிம் சமூகத்திற்காக நாடாளுமன்றத்தில் ஆக்ரோஷமாக குரல் கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு பெரு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.

இந்த சமூக சிந்தனை, ஆக்ரோஷம் தாம் வாக்களித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இல்லையே என்ற தாகம் சமூகத்தின் மத்தியிலுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குவியும் வாழ்த்துக்கள்!
குவியும் வாழ்த்துக்கள்!

ஏ.எல்.எம்.சலீம்