
posted 13th September 2021
வல்வெட்டித்துறை வல்வெட்டியில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்த உறவினர்களில் ஒருவர் 3 வாரங்களின் பின்னர் இன்று திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் சுப்பிரமணியம் கிருசாந்தன் (வயது-30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
கொலையில் ஈடுபட்டவர்களாக உறவினர்கள் இருவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வந்தனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் திருகோணமலை பொலிஸ் பிரிவில் தலைமறைவாகி உள்ளதாக காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிறப்புக் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்தது. தற்போதை கோவிட்-19 நிலமை காரணமாக அங்கு சென்று சந்தேக நபரைக் கைது செய்ய முடியாத நிலையில் திருகோணமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவலளிக்கப்பட்டது.
திருகோணமலை பொலிஸார் எடுத்த நடவடிக்கையில் சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மற்றையவர் தொடர்பில் தகவல் கிடைக்காத நிலையில் தேடப்பட்டு வருகிறார்.

எஸ் தில்லைநாதன்