
posted 8th September 2021

நிந்தவூர் அல்-அஷ்றக் (ம.ம.வி) தேசிய பாடசாலையின் பவள விழா நிகழ்வுகள் பாடசாலையின் பழைய மாணவர் சங்க உத்தியோகபூர்வ முகநூல் வாயிலாக, நவீன தொழிநுட்பங்களின் உதவியுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பாடசாலையின் பவள விழாக் குழுவினுடைய ஏற்பாட்டில், பழைய மாணவர் சங்கமும், பாடசாலை அபிவிருத்திச் சங்கமும், பாடசாலை முகாமைத்துவ குழுவும் இணைந்து, பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வினை வெற்றிகரமாக நிகழ்நிலையில் நிகழ்த்திக் காட்டியது. இவ்வாறு இணைய வழியே ஒரு பாடசாலையின் பவள விழாக் கொண்டாட்டமானது இரண்டு நாட்கள் தொடர்சியாக பெருமளவு பார்வையாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றிருப்பது இலங்கையிலேயே இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும்.
கிழக்கு மாகாணத்தின் கல்முனை கல்வி வலயத்தில், நிந்தவூர் கோட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பாடசாலையானது இலங்கையில் பல சாதனைகளை படைத்த மிகப் பிரபல்யமான ஒரு பாடசாலையாக விளங்குவதோடு, பாடசாலை நிகழ்வுகளை பிரம்மாண்டமான முறையில் தொழில்நுட்ப உதவியுடன் இணைய வழியாக நடாத்திக் காட்டி அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.
நாட்டினுடைய சட்ட திட்டங்களை மதித்து, தற்காலத்தில் அரசாங்கத்தினுடைய வழிமுறைகளை பின்பற்றி முன்மாதிரியான முறையில் கமு/கமு/அல்-அஷ்றக் (ம.ம.வி) தேசிய பாடசாலையானது இந்நிகழ்வை நடாத்திக் காட்டியிருக்கிறது.
இந்தப் பாடசாலையின் அதிபர் ஏ.ஏ அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்ற இந்த பவள விழாவில், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.பைசால் காசிம் தனது ஆசியுரையை வழங்கியதோடு, கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்குரிய பணிப்பாளர் கித்சிரி லியனகமகேயும் தனது ஆசிச்செய்தியினை வழங்கியிருந்தார். அவரது ஆசியில், இப்பாடசாலையினை ஒரு முன்னுதாரணமாக கருதுமாறு கருத்து வெளியிட்டுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.
மேலும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி என். புள்ள நாயகம், முன்னாள் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் கே. எல். முஹம்மட் தம்பி, முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி. நிசாம், வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன், கோட்டக்கல்வி பணிப்பாளர் எம். சரிஃபுதீன், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ. எம். தாஹிர், பாடசாலையில் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றிருக்கக்கூடிய அதிபர்கள் போன்ற பிரமுகர்கள் இவ்விழாவில் நிகழ்நிலையில் கலந்து தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து இருந்தது இவ்விழாவினை மேலும் சிறப்பாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1946 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலையானது 1996 ஆம் ஆண்டு தனது பொன்விழாவினையும் 2021ஆம் ஆண்டு தனது பவள விழாவினையும் வெகு சிறப்பாக கொண்டாடி, வரலாற்றுப் பக்கங்களில் சாதனைகளை படைத்துள்ளது.
மேலும் இந்நிகழ்வில் ஆசிரியர்களான வை.எம். அஷ்ரபினாலும், ஆசிரியர் ஏ. இஃப்திகார் அஹமட்டினாலும் தயாரிக்கப்பட்ட பாடசாலையின் வரலாற்றுத் தொகுப்பு, அனைத்து அதிபர்களினதும் சேவை விபரங்கள் என்பனவும் இணைக்கப்பட்டிருந்ததோடு, பழைய மாணவர் சங்கம் பவள விழாவினை சிறப்பிக்கும் முகமாக பழைய மாணவர்களிடையே நடாத்தி இருந்த C.O. Lesthakir ஞாபகார்த்த கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற கவிதையும் இடம்பெற்றதோடு பழைய மாணவர் சங்கம் தயாரித்து வழங்கிய பட்டறை எனும் குறும்படமும் ஒளிபரப்பப்பட்டது.
பல பல்சுவை அம்சங்களுடன் இரண்டு நாட்கள் நடைபெற்ற இணையவழி பவள விழா நிகழ்வுகளில் இருபத்தையாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டுகளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வை வெகு சிறப்பாக இணையம் வழியே நடாத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பாடசாலை சமூகமும், பவள விழா ஏற்பாட்டு குழுவும் தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளது.

ஏ.எல்.எம்.சலீம்