
posted 19th September 2021

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரபின் 21 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு ஒன்று கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டில் ஞாயிறு மாலை நடைபெற்றது.
கல்முனை மாநகர மேயர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில், மாநகர சபை மேயர் பணிமனை மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
நினைவேந்தல் நிகழ்வில், மறைந்த தலைவர் அஷ்ரப் பற்றி, முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் இணைந்த மாகாண சபையின் உறுப்பினருமான “முழக்கம்” ஏ.எல்.அப்துல் மஜீத் நினைவுப் பேருரை ஆற்றினார்.
மேலும் உலமாக்களால் அன்னாரின் ஆத்ம ஈடேற்றத்திற்காக விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வில் இடம் பெற்றதுடன், மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி றகீப் மேற்படி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“முஸ்லிம் சமூகத்திற்கு விடிவிளக்காகத்திகழ்ந்த தலைவர் அஷ்ரபின் மறைவின் பின் ஏற்பட்ட வெற்றிடம் அவர் மறைந்து 20 வருடங்கள் கடந்தும் நிரப்பப்படவில்லை.
முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் முகவரியைப் பெற்றுத்தந்த அஷ்ரப் காட்டிய அரசியல் பாதையில், அவரது கொள்கை விழியே நாம் நமது சமூக இலக்கு நோக்கிப் பயணிப்பது நம் கடமையாகும்.
இன்றைய நிலையில் பொதுவான வேலைத்திட்டம் நமக்கு மிக அவசியமாகும். இன்றைய அரசு எதேச்சதிகாரமாக முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டுவரும், செயற்படுத்த முனையும் பழிவாங்கல் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்” என்றார்.
“தலைவர் அஷ்ரபின் கனவுகளை வென்றெடுப்பதில் நாம் உறுதி பூண்டு செயற்பட வேண்டும். வருடாந்தம் அவருக்காக நினை வேந்தல் நிகழ்வுகளை நடத்துவதோடு மட்டும் நாம் நின்று விடக்கூடாது” என நினைவுப் பேருரை ஆற்றிய தவிசாளர் அப்துல் மஜீத் அறை கூவல் விடுத்தார்.

ஏ.எல்.எம்.சலீம்