
posted 15th September 2021
மயூரன் தனுசியா என்ற ஒரு வயதும் 03 மாதமும் நிரம்பிய பெண் குழந்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தையுடன், இருவரும் கிளிநொச்சியில் ஒருவருமாக தொற்றால் நேற்று புதன்கிழமை மூவர் உயிரிழந்தனர். தவிர, வடக்கு மாகாணத்தில் நேற்று 184 பேருக்கு நடத்தப்பட்ட பி. சி. ஆர் பரிசோதனையில் 59 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இதன்படி, யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனை முடிவிலேயே இந்த விடயம் வெளியானது.
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் தொற்றுக்கு உள்ளான ஒரு வயதும் 3 மாதமும் நிரம்பிய குழந்தை தொற்றால் உயிரிழந்தது. அத்துடன், யாழ்ப்பாணம் போதனா மருத்துமவனையில் 51 வயது ஆண் ஒருவர் தொற்றால் உயிரிழந்தார். இதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் 72 வயது பெண் ஒருவர் கொரோனாவால் மரணமானார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் என 28 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். இதில், போதனா மருத்துவமனையில் 11 பேர், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் 7 பேர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 4 பேர், கோப்பாய் பிரதேச மருத்துவமனையில் 4 பேர், நொதேர்ன் சென்றல் ஹொஸ்பிற்றலில் 2 பேர் ஆவர். தவிர, காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருவரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
வவுனியா மருத்துவ அதிகாரி பிரிவில் 10 பேர், வவுனியா பொது மருத்துவமனையில் 2 பேர், புளியங்குளம் பிரதேச மருத்துவமனையில் ஒருவர் என வவுனியா மாவட்டத்தில் 13 பேருக்க தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
மல்லாவி ஆதார மருத்துவமனையில் 7 பேர், பொது மருத்துவமனையில் 4 பேர் என முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 பேரும், கிளிநொச்சி பொது மருத்துவமனையில் 2 பேரும், இரணைமடு விமான படை முகாமில் இருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

எஸ் தில்லைநாதன்