
posted 28th September 2021

தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர்
“ஒரே நாடு, ஒரே சட்டம் எனும் போர்வையில், முஸ்லிம்களின் பாரம்பரிய உரிமையான காதி நீதிமன்றங்களை ஒழிப்பதற்கு திட்டமிட்ட வகையில் செயற்பட்டுவரும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக அரசியல் பேதகங்களும் அப்பால் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்புக்குரல் எழுப்ப வேண்டும்.
அத்தோடு இது விடயமாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் முன்வர வேண்டும்.”
இவ்வாறு, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கோரும் தீர்மானம் ஒன்று நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிந்தவூர் பிரதேச சபையின் செப்டம்பர் மாதத்திற்கான 4 ஆவது சபையின் 42 ஆவது கூட்ட அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த சபை அமர்வில் இலங்கை அரசு முன்னெத்துவரும் முஸ்லிம்களின் காதி நீதிமன்ற முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கை, அதனையொட்டிய அமைச்சரவை தீர்மானம் தொடர்பில் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ரி.எம்.சப்றாஸ், சட்டத்தரணி ஏ.எல்.ரியாஸ் ஆதம் உட்பட உறுப்பினர்கள் பலரும் பிரஸ்தாபித்து கண்டனங்களுடனான விசனத்தையும் வெளிப்படுத்தினர்.
இதன்போதே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு (அரசுக்கு) ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சகல முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வலியுறுத்திக்கோரும் மேற்படி தீர்மானம் சபை அமர்வில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ரி.எம்.சப்றாஸ் தீர்மானம் தொடர்பில் உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“எமது மார்க்க விழுமியங்கள் கொண்டகாதி நீதிமன்றங்களை ஒழிப்பதற்கு இன்றைய பொது ஜனபெரமுன அரசு எடுத்துவரும் நடவடிக்கை சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களின் உரிமையைப் பறிக்கும் செயற்பாடாகும்.
இந்த நடவடிக்கையை ஒருபோதும் அனுதிக்க முடியாது. எனவே முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடுகளின்றி இதனை எதிர்த்து குரல் கொடுப்பதுடன் குறிப்பாக நாடாளுமன்றத்தில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுக்க தயங்காது முன்வர வேண்டும்.” என்றார்.
தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் உரையாற்றுகையில்,
“முஸ்லிம்களுக்கு எதிராக அரசு முன்னெடுத்துவரும் அராஜகத்தனமான செயற்பாடுகளில் ஒன்றாகவே காதி நீதிமன்றங்களை ஒழிப்பதற்கான முனைப்புகளை மேற்கொண்டுள்ளது.
முஸ்லிம்களை நசுக்குதற்கு அரசு வரிந்து கட்டிக்கொண்டு செயற்படுவதை நிறுத்த வேண்டும்.
1800 வருடங்களாக நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்காக நடைமுறையிலுள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசு கைவைக்கமுனைவது விசனிக்கத்தக்கதும் கவலைக்குரிய விடயமுமாகும்.
எனவே, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிராக உரத்துக் குரல் எழுப்ப வேண்டிய இடத்தில் உரத்துக்குரல் கொடுக்க வேண்டும்.” என்றார்.
உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எல்.றியாஸ் ஆதம், எம்.எல்.றிகானா உட்பட மேலும் சிலரும் தீர்மானம் தொடர்பில் உரையாற்றினார்.
இது விடயத்தில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கே சந்தித்து வலியுறுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம்