
posted 29th September 2021

எம்.ஐ.எம். இஸதீன்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வசம் இருந்த மன்னார் பிரதேச சபை தற்பொழுது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி வசம் திரும்பியுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த எருக்கலம்பிட்டி உறுப்பினர் எம்.ஐ.எம். இஸதீன் ஒரு வாக்கு வித்தியாசத்தால் மன்னார் பிரதேச சபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வட மாகாண ஆளுநரால் மன்னார் பிரதேச சபை தவிசாளர் நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹினால் கொழும்பு மேல் நீதிமன்றில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு புதன் கிழமை (29.09.2021) நடைபெற்றது.
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில் அப்பதவியில் பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றும்போது குற்றங்கள் புரிந்துள்ளார் என்ற அடிப்படையில் கடந்த 14 ந் திகதி (14.09.2021) தொடக்கம் தனது மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவியையும் உறுப்பினர் பதவியையும் இழந்த நிலையில் மன்னார் பிரதேச சபை தவிசாளருக்கான தேர்வு புதன் கிழமை (29.09.2021) காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.
வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் டிரஞ்சன் தலைமையில் மன்னார் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற இத் தேர்தலில் 21 உறுப்பினர்களில் ஒருவர் சபையிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் 20 உறுப்பினர்கள் மத்தியிலேயே இத் தேர்தல் இடம்பெற்றது.
இத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் 07 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் 06 உறுப்பினர்களும், இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 02 உறுப்பினர்களும், ஈபிடிபி சட்சி சார்பில் 01 உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டனி சார்பில் 01 உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 02 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சார்ந்த 01 உறுப்பினரும் மொத்தம் 20 உறுப்பினர்கள் இத் தேர்தலில் வாக்களித்தனர்.
இத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த எருக்கலம்பிட்டி உறுப்பினர் எம்.ஐ.எம். இஸதீனும், தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசாலை உறுப்பினர் ஜே ஈ.கொன்சன் குலாஸூம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சார்ந்த என்.செபமாலை பீரீஸ் ஆகியோர் தவிசாளருக்கான போட்டியில் இறங்கியிருந்தனர்.
இதில் முதல் சுற்றில் நடைபெற்ற திறந்த போட்டியில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த எருக்கலம்பிட்டி உறுப்பினர் எம்.ஐ.எம். இஸதீன் 09 வாக்குகளையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசாலை உறுப்பினர் கொன்சன் குலாஸ் 08 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சார்ந்த செபமாலை பீரீஸ் 03 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
இதைத் தொடர்ந்து இரண்டாம் சுற்று போட்டி இடம்பெற்றது. இப் போட்டியில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த எருக்கலம்பிட்டி உறுப்பினர் இஸதீனுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசாலை உறுப்பினர் கொன்சன் குலாஸூக்கும் இடையே நடைபெற்றது.
இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 06 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த 01 உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டனி சார்பில் 01 உறுப்பினரும் ஈபிடிபி சட்சி சார்பில் 01 உறுப்பினரும் வாக்களித்ததில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எருக்கலம்பிட்டி உறுப்பினர் இஸதீனுக்கு 09 வாக்குகளும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் 07 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 01 உறுப்பினரும் வாக்களித்ததில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட பேசாலை உறுப்பினர்.கொன்சன் குலாஸூக்கு 08 வாக்குகளும் பெற்றார்கள். ஆனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சார்ந்த 01 உறுப்பினரும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த 02 உறுப்பினர்களும் இரண்டாம் சுற்று வாக்களிப்பில் நடுநிலையில் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எருக்கலம்பிட்டி உறுப்பினர் இஸதீன் 09 வாக்குகள் பெற்று அதாவது, ஒரு வாக்கின் அதிகரிப்பால் மன்னார் பிரதேச சபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இத் தேர்தலின்போது மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் தவிர ஊடகவியலாளர்கள் மற்றும் இவ் விடத்துக்கு வருகை தந்திருந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உட்பட அரசியல் வாதிகளோ எவரும் தேர்தல் முடியும்வரை வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.
அத்துடன் மன்னார் பிரதேச சபையை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ