
posted 8th September 2021

எந்த தடுப்பூசி விரைவாக கிடைக்கிறதோ அதனை பெற்றுக் கொள்ளுங்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
சினோபார்ம் தடுப்பூசி தொடர்பில் பொது மக்களிடையே காணப்படும் ஐயப்பாடு தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இலங்கையில் ஐந்து வகையான தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன
இன்றுவரை இலங்கையிலே 10 மில்லியன் மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி தான் வழங்கப்பட்டுள்ளது.
எனவே தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டால் தடுப்பூசிகளிடையே வேறுபாடுகள் காணப்படாது.
ஆனால் நாங்கள் இந்த தடுப்பூசிதான் போடுவோம் என பார்த்துக் கொண்டிருக்காது எந்தத் தடுப்பூசி எமக்கு விரைவாக கிடைக்கின்றதோ அந்த தடுப்பூசியை நாங்கள் பெற்றுக் கொள்ள முன்வரவேண்டும்.
சினோபார்ம் தடுப்பூசி பற்றி பொதுமக்கள் மத்தியில் ஒரு சந்தேகம் ஒரு ஐயப்பாடு நிலவுகின்றது. இது சீனத் தயாரிப்பு. எந்தளவுக்கு இது நோயை குறைக்கும் என்ற ஐயம் காணப்படுகின்றது. இது சீனாவில் மட்டுமல்லாது பல நாடுகளில் இந்த ஊசி பயன்படுத்தப்படுகின்றது. அதாவது பல நாடுகளில் சினோபார்ம் தடுப்பூசி வழங்கப்பட்டதன் மூலம் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனவே இந்த தடுப்பூசி தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை. எனவே இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் சினோபார்ம் தடுப்பூசி மூலம் இறப்புகளையும் நோய் தாக்கத்தினையும் குறைக்க முடியும் என்பது ஆய்வுகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது, என்றார்.