அம்பாறை மாவட்டத்தில் பெரும் போகம்
அம்பாறை மாவட்டத்தில் பெரும் போகம்

இலங்கையின் நெல் உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கும் அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கைக்கான ஆரம்ப நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

வழமை போன்று அல்லாது நெற்செய்கையை இரசாயனப் பசளைப்பயன்பாடின்றி, சேதனப் பசளையையே பாவித்து செய்கை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு இம்முறை விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் 89200 ஹெக்டெயர் நிலப்பரப்பில் இம்முறை பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்துள்ளார்
கல்லோயா சேனாநாயக்க சமுத்திரத்திலிருந்து நீர் விநியோகத்தைப்பெறவுள்ள முக்கிய விவசாயப் பிரிவுகளான நிந்தவூர், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை முதலான பிரதேசங்களில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படவிருக்கின்றது.

ஜனாதிபதி கோட்டபாயராஜபக்ஷவின் நஞ்சற்ற உணவு (சௌபாக்கியா) வேலைத்திட்டத்தின் கீழ் இம்முறை நெற்செய்கைக்கு இரசாயன பசளை (உரம்) பாவனையை தவிர்த்து சேதனப்பசளை பாவனையே ஊக்கு விக்கப்படவிருப்பதால் தற்சமயம் இந்த மாவட்டத்தில் சேதனப் பசளை உற்பத்தியிலும் விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை நீண்டகாலமாக இரசாயனப்பசளைப் பாவனையுடன் நெற்செய்கை மேற்கொண்டு பழக்கப்பட்டதமக்கு சேதனப் பசளைப்பாவனை மூலம் வழமையான, எதிர்பார்க்கும் விளைச்சல் கிடைக்குமா என்பதில் பெரும் சந்தேகம் உள்ளதாகவும்,
திடீரென இரசாயனப் பசளை இறக்குமதியை அரசு நிறுத்தி எடுத்த எடுப்பிலேயே சேதனப் பசளைப்பபாவனைக்கு உட்படுத்தியுள்ளமை பெரும் கவலையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் மாவட்ட விவசாயிகள் பலர் தெரிவித்தனர்.

இதனால் எதிர்வரும் பெரும்போக நெல் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்படும் அபாயமுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் பெரும் போகம்

ஏ.எல்.எம்.சலீம்