
posted 21st October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வெற்றிகரமான கர்த்தால் வடக்கில்
தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெள்ளி (20) முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் போராட்டத்திற்கு யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண ஆதரவை வழங்கியுள்ளன.
இதனால் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியுள்ளது.
தனியார் பேருந்து சேவை அனைத்தும் முடங்கியுள்ளன. இலங்கை போக்குவரத்து சபை பேருந்து அங்காங்கே சேவையில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது.
தவணைப் பரீட்சைகள் காரணமாக பாடசாலைகள் இயங்கியதையும் அவதானிக்க முடிந்தது.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்தன.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ப. சரவணராஜா, அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவியிலிருந்து இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதை எதிர்த்து வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெற்றிகரமான வடமராட்சியில் நடந்த ஹர்த்தால்
கர்த்தாலைப்பற்றிய பொதுவான கண்ணோட்டம்
வடக்கில் கடையடைப்பு மட்டுமே! பொதுமுடக்கம் நேற்று பிசுபிசுப்பு!!
கிழக்கில் ஹர்த்தால் சோபிக்கவில்லை வீதிகளில் மக்கள் வழமை போன்று நடமாட்டம்
எஸ் தில்லைநாதன்
தமிழ்க் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நேற்று (20) முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் பிசுபிசுத்துப்போனது. பிரதான நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தாலும் பொதுச்சேவைகள் இடம்பெற்றன. வீதிகளில் மக்கள் நடமாட்டம் வழமை போன்று இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியும், தமிழ்பேசும் மக்கள் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்தும் வடக்கு - கிழக்கில் நேற்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க 8 தமிழ்க் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்திருந்திருந்தன. எனினும், ஹர்த்தால் போராட்டம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
வடக்கு - கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரதான நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தாலும் சுப்பர் மார்க்கெட்டுகள், மருந்தகங்கள் திறக்கப்பட்டிருந்தன.
வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் வழமை போன்று காணப்பட்டது. அதேவேளை, வீதியோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது. சில இடங்களில் பொதுச்சந்தைகளும் இயங்கின. எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கப்பட்டிருந்தன.
தனியார் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இ.போ.ச. பஸ் சேவைகள் வழமைபோல் இடம்பெற்றன.
பாடசாலைகளில் தவணைப் பரீட்சை இடம்பெற்று வருகின்றமையால் கல்விச் செயற்பாடுகள் வழமை போல் நடைபெற்றன.
வங்கிகள், நிதி நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான இடங்களில் திரையரங்குகளும் திறக்கப்பட்டிருந்தன. அங்கு மக்கள் குவிந்திருந்தனர்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பிரதான நகரங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன. யாழ்ப்பாண நகரத்தின் வர்த்தக செயற்பாடுகள் முடங்கின.
தனியார் பேருந்து சேவை அனைத்தும் முடங்கின. இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபட்டன.
பாடசாலைகள் வழக்கம் போல செயற்படுகிறது. அரச அலுவலகங்கள், அத்தியாவசிய சேவைகள் செயற்படுவதால், மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டம் காணப்பட்டது.
திருநெல்வேலி சந்தை மூடப்பட்டிருந்ததால் ஒரு பகுதி வர்த்தகர்கள், சந்தைக்கு வெளியில் தமது விவசாய பொருட்களை விற்பனை செய்தனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்த நடவடிக்கைகள் முடங்கின. குறுந்தூர சேவைகளில் மாத்திரம் தனியார் பேருந்துகள் ஈடுபட்டன.
அரச பேருந்துகள், ஏனைய அரச திணைக்களங்களின் சேவைகள் வழமை போன்று இடம்பெற்றன.
முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட்டன. மருந்தகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வர்த்தக செயற்பாடுகள் இடம்பெற்றன.
சேவைச் சந்தையும் முழுமையாக முடங்கியது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான நகரங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. பாடசாலைகள், அரச அலுவலகங்கள் வழக்கம் போல செயற்பட்டன. தனியார் பேருந்துகள் மட்டுப்படுத்தப்பட்டளவில் இயங்கின. அரச பேருந்துகள் வழக்கம் போல செயற்பட்டன.
நகருக்கு வெளியிலுள்ள பிரதேசங்களில் வழக்கம் போல வர்த்தக செயற்பாடுகள் இடம்பெற்றன.
வவனியா, மன்னார்
இரண்டு மாவட்டங்களின் பிரதான நகரங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. வவுனியாவில் ஒமந்தை, புளியங்குளம், கனகராயன் குளம் பகுதிகளில் பாதிக்கதவுகள் திறந்து வர்த்தக நிலையங்கள் இயங்கின. குறுந்தூர தனியார் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
மன்னாரிலும், இதே நிலவரம்தான் காணப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)