
posted 25th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வாழ்வியல் சார்ந்த அறிவு முக்கியம் - டாக்டர் ஸ்டாலின் வர்ஷா
“அறிவியல் மற்றும் வாழ்வியல் முறையில் எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதற்கு பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமாகும். உணவு சார்ந்த வாழ்வியல் சார்ந்த அறிவில்லாததால் சமுதாயம் இன்று பெரும்பாதிப்புகளை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது”
இவ்வாறு, நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்ற “நோயை வெல்வோம்” எனும் தலைப்பிலான விசேட கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய இந்தியாவை (கேரளா)ச் சேர்ந்த டாக்டர். ஸ்டாலின் வர்ஷா கூறினார்.
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். கே.எல்.எம். றயீஸின் எற்பாட்டிலும், அவரது தலைமையிலும் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது.
பல்வேறு திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் உட்பட மாதர் அமைப்புக்களின் பிரதி நிதிகளும் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
டாக்டர் ஸ்டாலின் வர்ஷா தொடர்ந்தது உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“எமது பழக்க வழக்கங்கள் அறிவு சார்ந்தவையாக அமைய வேண்டும். ஆனால் அறிவியலில் பெயர் சொல்ல மட்டும் நாம் பழகியுள்ளோம். இந்த வகையில், மேலைத்தேய வாழ்க்கை முறையில் மோகம் கொண்டு நம்மை நாமே அழித்துக்கொண்டிருக்கின்றோம்.
குறிப்பாக புதிய வாழ்க்கை முறையில் யதார்த்தமே இல்லாது வெறும் றெடிமேட்தனத்துடன் இன்றைய சமுதாயம் வாழ்வதுடன், சோம்பேறித்தனமாக எதிர்கால சந்ததியினரான நம்பிள்ளைகளையும் வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்.
இன்றைய நிலையில் பரம்பரை உணவு சார்ந்த அறிவை நாம் ஒழித்தமை இன்றைய நமது சுகநல வாழ்வுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன.
எனவே உணவு அறிவியல் நமது சமையலறையிலிருந்து ஆரம்பமாக வேண்டும். உணவுமுறையில் சோம்பேறித்தனமாகத் திகழும் கிழக்கில் இத்தகைய புதிய மறுமலர்ச்சி ஏற்பட்ட அனைவரது கவனமும் திரும்ப வேண்டும்.
இன்று மனிதன் பிள்ளைகளை வளர்க்கிறானே தவிர, அவர்களை வளரவிடுவதில்லை, இந்த நிலை உணர்ந்து செயற்பட வேண்டும்.
மேலைத்தேய மொகத்துடனான நமது வாழ்க்;கை முறைமாற வேண்டும்” என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)