
posted 23rd October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
யாழ்ப்பாண பல்கலையில் திருமந்திர ஆய்வு மாநாடு!
அகில இலங்கை சைவ மகா சபையுடன் யாழ். பல்கலைக்கழக சைவ சித்தாந்ததுறை இணைந்து 'ஒன்றே குலமாய் திருமந்திரம் காட்டும் அன்பே சிவத்திற்கு உயிர்கொடுப்போம்' எனும் தொனிப்பொருளில் நடத்தும் திருமந்திர ஆன்மீக மாநாடு எதிர்வரும் 28ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30மணி முதல் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது.
சைவ சித்தாந்த துறைத்தலைவர் கலாநிதி பொன்னத்துரை சந்திரசேகரம் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டுக்காக 50 திருமந்திரங்கள் தெரிவு செய்யப்பட்டு வடக்கு, கிழக்கு, மலையகம் தழுவியரீதியில் அறநெறி மாணவர்களிடையே போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் வாரத்தை திருமந்திர வாரமாகவும் அகில இலங்கை சைவ மகா சபை மற்றும் யாழ். பல்கலைக்கழக சைவ சித்தாந்ததுறை பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த வாரத்தில் திருமூலரின் திருமந்திரத்தை அறிதல், பிறருக்கு தெளிவூட்டுதல் ஆகிய செயல்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
மாநட்டின் நிறைவில் திருமந்திர மாநாட்டு மலர் ஒன்று வெளியீடு செய்துவைக்கபடவுள்ளது. இந்தியாவிலிருந்து ஓய்வு நிலை பேராசிரியர் கலாநிதி அருணை பாலராவாயன் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
இந்த மாநாட்டில் யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் கலந்து சிறப்பிக்கவுள்ளார். சிறப்பு விருந்தினர்களாக யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள பீட பீடாதிபதி சிவசிறீ சர்வேஸ்வர ஐயர் பத்மநாதன், செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார திணைக்கள உத்தியோகத்தர் கிருஷ்ணபிள்ளை குணநாயகம் ஆகியோர் பங்கேற்பர்.
கௌரவ விருந்தினர்களாக இந்து நாகரிகதுறை தலைவர் யாழ் பல்கலைக்கழக கலாநிதி சுகந்தினி முரளிதரன், கிழக்கு பல்கலைக்கழக இந்து நாகரிகதுறை தலைவர் நாகையா வாமன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவர்களுடன், நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம், தென்கையிலை ஆதீனம், மெய்கண்டார் ஆதீனம், தருமை ஆதீன கிளைமடம் திருக்கேதீச்சரம், திருநாவுக்கரசர் ஆதீனம் நுவரெலியா, சிவகுரு ஆதினம் நல்லூர் ஆகியவற்றின் குரு முதல்வர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)