
posted 28th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
யாழ். நகரப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ பரவல்
யாழ். நகர் காங்கேசன்துறை வீதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் சேதம் ஏற்பட்டுள்ளது.
கோயில் சிலைகள், பித்தளை உபகரணங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்றிலேயே நேற்று முன்தினம் வியாழன் (26) இரவு தீ விபத்து ஏற்பட்டது.
குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் வர்த்தக நடவடிக்கைகளை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் திடிரென வர்த்தக நிலையம் தீப்பிடித்து எரிவதை அருகிலுள்ள வர்த்தக நிலையத்தவர்களும் வீதியால் சென்றவர்களும் அவதானித்து வர்த்தக நிலைய உரிமையாளருக்கு தகவல் வழங்கினர்.
மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினருக்கும் விடயம் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் அங்கு வந்த தீயணைப்புப் பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அத்தோடு மின்சார சபையினருக்கும் அறிவிக்கப்பட்டு மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
எனினும் வர்த்தக நிலையத்தில் இருந்த பெருமளவிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியதுடன் வர்த்தக நிலையத்திலும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் மின்னொழுக்கு காரணமாக குறித்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)