
posted 11th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சந்தைக் காவலாளிகள் மீது வன்முறைக் குழு தாக்குதல்
(எஸ் தில்லைநாதன்)
சங்கானை பொதுச் சந்தைக்குள் இரவு வேளை அத்துமீறி நுழைந்த குழு ஒன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி மிரட்டிவிட்டுச் சென்றுள்ளது.
சங்கானை பொதுச்சந்தை பாதுகாப்பு நடவடிக்கையில் தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாப்புக் கடமையாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது, அங்கு வந்த போதையில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்படும் நபர்கள், யாரோ ஒருவருடைய பெயரைக் கூறி அவர் நிற்கிறாரா? என்று கேட்டிருக்கின்றனர். இரவு வேளை என்பதால் அவர் இல்லை என்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதனை அடுத்து வாய்த்தர்கத்தில் ஈடுபட்ட அவர்களில் ஒருவர் பூட்டப்பட்டிருந்த கதவின் மீது ஏறி உள் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனை அடுத்து அயலில் இருந்தவர்கள் சிலர் வந்து பாதுகாப்பு உத்தியோகத்தரைக் காப்பாற்றியிருக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ளது.
சங்கானைப் பகுதியில் சமூகவிரோதச் செயற்பாடுகள், திருட்டுச் சம்பவங்கள் உட்பட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் சில குழுக்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுவரும் நிலையில் பொதுச் சந்தை ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றமை தொடர்பில் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வவுனியா வெளிக்குளம் விபத்தில் 2 விசேட அதிரடிப்படையினர் பலி
(எஸ் தில்லைநாதன்)
வவுனியா, வெளிக்குளம் பகுதியில் நேற்று முன் தினம் (09) இரவு திங்கள் வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் ஆறு படையினர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
மழையின்போது வீதியில் நின்றிருந்த மாடுகள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படை ஜீப் மோதி வீதியை ஒட்டியுள்ள சுவரில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வவுனியா, மடுகந்தவில் அமைந்துள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த ஏனைய ஆறு அதிரடிப்படையினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
தென்னையால் விழுந்து நான்கு பிள்ளைகளின் தந்தை மரணம்
(எஸ் தில்லைநாதன்)
தென்னை மரத்தால் விழுந்து, நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்று முன்தினம் திங்கள் (09) உயிரிழந்துள்ளார். புத்தூர் கிழக்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை கணேசலிங்கம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் கடந்த 6ஆம் திகதி, தென்னங் கள்ளு உற்பத்தி தொழில் செய்வதற்காக ஏறிய நிலையில் வழுக்கி கீழே விழுந்ததுள்ளார்.
இந்நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் இன்றைய தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)