
posted 9th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வைத்தியர் ஜெயபாஸ்கரன் கவலை
(எஸ் தில்லைநாதன்)
யாழ்.மாவட்டத்தில் அண்மைய நாட்களில் இரத்த தானத்தை ஒழுங்கு செய்கின்ற ஒருங்கிணைப்பாளர்களும் தாமாக முன் வந்து இரத்த தானம் வழங்குபவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து கொண்டுசெல்வதாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர்ஜெய பாஸ்கரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இரத்ததானம் வழங்குபவர்களின் எண்ணிக்கை குறைவுக்கு வெளிநாடு செல்கின்ற இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பாக இருக்கலாம். அதேநேரம் நாட்டில் பொருளாதர நிலைமை இன்னொரு பக்கமாக இருக்கலாம்.
தேக ஆரோக்கியமாக இருக்கின்றவர்கள் நீங்கள் எந்த நேரமும் நான்கு மாதத்திற்கு ஒரு தடவை இரத்தானத்தை வழங்கிச் செல்ல முடியும். நாம் அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்ட பின்னரே உங்களிடமிருந்து இரத்தம் பெற்றுக் கொள்கின்றோம்.
ஆரோக்கியமானவர்களிடம் இருந்து மாத்திரமே தெரிவு செய்து இரத்தத்தை பெறுகின்றோம். இரத்ததானம் கொடுப்பதன் மூலம் உங்களுடைய ஆரோக்கியமானது வருடத்திற்கு ஒரு தடவையாவது பரிசோதிக்கப்படுகின்றது.
அதே நேரம் இரத்தம் கொடுப்பதன் மூலம் ஏற்படுகின்ற உடல் ஆரோக்கியம் இதன் மூலம் உறுதி செய்து கொள்ளப்படுகின்றது. ஆகவே, இரத்தம் வழங்குவது அளப்பரிய சேவையாக இருக்கும் என்றார்.

யாழில் வாள்வெட்டு; இளைஞர் படுகாயம்!
(எஸ் தில்லைநாதன்)
யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளை நிற காரில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்றனர்.
இச் சம்பவத்தில் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞரே காயமடைந்தார்.
மேலும் இச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
உரும்பிராயில் வீட்டை உடைத்து திருடிய மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது
(எஸ் தில்லைநாதன்)
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடும்பிராய் மூன்று கோவில் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (06) வீட்டை உடைத்து 7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருள்களைத் திருடிய மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டு உரிமையாளர் மட்டக்களப்புக்குச் சென்று நீண்ட நாள்களுக்கு பின் வருகை தந்து வீட்டை திறந்து பார்த்தபோது வீடு உடைக்கப்பட்டு இருந்ததை அவதானித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்தனர்.
குறித்த முறைப்பாட்டை விசாரணை செய்த கோப்பாய் பொலிஸார் நேற்று முன் தினம் மூன்று சந்தேகநபர்களை கைது செய்ததோடு குறித்த வீட்டில் திருடப்பட்ட ஏழு லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களையும் மீட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சுன்னாகம், உடும்பிராய், பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் குறித்த சம்பவத்துடன் தொடர்பட்டுள்ள மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விலையுயர்ந்த தொலைக்காட்சி, மின்மோட்டர், மடிக்கணினி மற்றும் பெறுமதியான கைத்தொலைபேசி, தோடு, நவீன ரக கை மணிக்கூடு என்பன மீட்க்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
4 பிள்ளைகளின் தந்தை மாயம்
(எஸ் தில்லைநாதன்)
வவுனியா சிதம்பரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகனூர் கிராமத்தில் வசித்து வரும் அன்டன் ஜோன்சன் என்பவரை கடந்த 04 ஆம் திகதி தொடக்கம் காணவில்லை என தெரிவித்து அவரின் மனைவியினால் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்த குறித்த நபர் கடந்த 04 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் நேற்று (08) வரை வீடு திரும்பவில்லை.
இதனை அடுத்து அவரின் மனைவியினால் கணவரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
வீட்டிலிருந்து அவர் வெளியேறுகையில் நீல நிறம் சாரம் மற்றும் ரோஸ் கலர் சட்டையும் அணிந்து சென்றிருந்தார் என கூறப்பட்டது.
யாழில் ஹெரோயினுடன் இருவர் கைது
(எஸ் தில்லைநாதன்)
ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் செல்வபுரம் பகுதியில் கோப்பாய் பொலிஸார் நேற்று முன்தினம் விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.
அதன்போது அப்பகுதியில் நடமாடிய இளைஞர்களை சோதனையிட்ட போது, 24 வயதுடைய இளைஞன் ஒருவரின் உடைமையில் இருந்து 250 மில்லி கிராம் ஹெரோயினும், 22 வயதுடைய மற்றுமொரு இளைஞனின் உடைமையில் இருந்து 150 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து இருவரையும் கைது செய்த பொலிஸார் அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஜே.சி.பி இயந்திரத்தை கழுவும்போது மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு
(எஸ் தில்லைநாதன்)
நேற்று (08) ஈவினை, கிழக்கு புன்னாலைகட்டுவன் பகுதியில் ஜே.சி.பி இயந்திரத்தை கழுவிக் கொண்டு இருந்தவேளை மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் அச்சுவேலி - தோப்பு பகுதியைச் சேர்ந்த கிட்டுனன் லோகநாதன் (வயது 39) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குடும்பஸ்தர் ஜே.சி.பி இயந்திரத்தை கழுவிக்கொண்டு இருந்தவேளை, இன்னொருவர் அதனை கழுவுவதற்காக நீர் பாய்ச்சிக்கொண்டு இருந்தார். இதன்போது திடீரென நீருடன் மின்சாரமும் இணைந்து பாய்ச்சப்பட்டதால் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் இன்றைய தினம் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)