
posted 7th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஜனாதிபதி பொய்யுரைத்ததாக கத்தோலிக்க திருச்சபை குற்றச்சாட்டு
(எஸ் தில்லைநாதன்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆயர்கள் பேரவையுடன் கலந்துரையாடியதாக ஜேர்மன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கருத்தை கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது.
கத்தோலிக்க திருச்சபையால் வெளியிடப்படும் இலங்கையின் முதலாவதும் பழமையானதுமான சிங்கள பத்திரிகையான ஞானார்த்த பிரதீபயவின் இந்த ஞாயிற்றுக்கிழமை பதிப்பில் ஜனாதிபதியின் பொய்யான அறிக்கை என்ற தலைப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அவர்கள் பதிலளித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையுடன் கலந்துரையாடியதாகவும், கர்தினால் உடன் தொடர்பு கொள்ளப்போவதில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜேர்மனியின் Deutsche Welleக்கு வழங்கிய விசேட செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.
கத்தோலிக்க திருச்சபையின் உத்தியோகபூர்வ பத்திரிகையான 'ஞானார்த்த பிரதீபய' எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் ஹரோல்ட் அன்ரனி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதிக்க கத்தோலிக்க பேரவையை ஜனாதிபதி தொடர்புகொள்ள்வில்லையெனத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
"மேலும், கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஒருபோதும் ஜனாதிபதியை சந்திக்கவில்லை என்பது எங்களுக்குத் தெரியும்."
மேலும், கர்தினாலுக்கும், கத்தோலிக்க ஆயர்கள் பேரவைக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதைக் காட்ட ஜனாதிபதி இந்த கலந்துரையாடலில் தோல்வியடைந்த முயற்சியை மேற்கொண்டதாக ஞானார்த்த பிரதீபய அறிக்கையிட்டுள்ளது.
“எவ்வாறாயினும், நாட்டின் தேசிய பிரச்சினைகள் மற்றும உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த நிலைப்பாடு அனைத்து ஆயர்களின் உடன்பாட்டுடன் கூட்டாக வெளிப்படுத்தப்படும் என அருட்தந்தை ஹெரோல்ட் அன்ரனி பெரேரா எங்கள் செய்தித்தாளுக்கு தெளிவாக தெரிவித்தார்.”
மேலும் ஜனாதிபதியை தான் தனிப்பட்ட ரீதியில் சந்தித்த சந்தர்ப்பத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய கிடைக்கப்பெற்ற, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அடங்கிய ஆறு குறுந்தகடுகளை சட்டத்தரணிகள் ஆராய்ந்து வருவதாக கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் ஹெரோல்ட் அன்ரனி மேலும் தெரிவித்துள்ளார்.
இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர், புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருடன், குருநாகல் ஆயர் ஆலயத்தில், அந்த மறைமாவட்டத்தின் இரு அருட்தந்தையர்களை சந்தித்த கத்தோலிக்க பேரவையின் தலைவர், பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்ததாக கூறியிருந்தார்.
கத்தோலிக்க மத நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து அங்கு விவாதிக்கப்பட்டதாக வத்திக்கானின் உத்தியோகபூர்வ கத்தோலிக்க ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

யாழ். வருகிறார் ஜனாதிபதி
(எஸ் தில்லைநாதன்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 18ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.
இதனிடையே ஜனாதிபதியின் வருகையின் போது முல்லைதீவு நீதிபதி விவகாரத்துக்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க தமிழ் தரப்புகள் தயாராகி வருகின்றன என்றும் அறிய வருகின்றது.

கிளிநொச்சியில் வீட்டுக்கு தீ வைப்பு
(எஸ் தில்லைநாதன்)
கிளிநொச்சி கல்மடுநகர் இராமநாதபுரம் பகுதியில் வீடு ஒன்றின் மீது நேற்று முன் தினம் (05) வியாழக்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கல்மடு நகர் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 30 ஏக்கர் சந்திப் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது குறித்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து குறித்த வீட்டுக்கு தீ மூட்டப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் அறிய முடிகின்றது.
இதேவேளை, கிளிநொச்சி அக்கரான் குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் எரியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் நினைவாக மரக்கன்றுகள் நாட்டல்
(எஸ் தில்லைநாதன்)
மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் நினைவாக நேற்று முன்தினம் (05) மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.
கடந்த ஆனி மாதம் யாழ்ப்பாணம் - கல்லூண்டாய் பகுதியில், நேருக்கு நேர் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில், இரண்டு மோட்டார் சைக்கிள்களின் சாரதிகளும் உயிரிழந்தனர்.
இதில் உயிரிழந்த அராலி மத்தி, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெ. சறோஜன் என்பவரது 29வது பிறந்த தினம் நேற்று முன்தினமாகும் (2023.10.05).
இந்நிலையில் அவரது நினைவாக, அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த பகுதியில் வீதியோரத்தில் பயன்தரு, நிழல் தரு மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன. இவ் வேலைத் திட்டமானது அவரது குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.
மின்கம்பி அறுந்து விழுந்து பெண் ஒருவர் படுகாயம்
(எஸ் தில்லைநாதன்)
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள மின்சார கம்பி அறுந்து விழுந்து, மின்சாரம் தாக்கியதில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த பகுதியில் வீதி அகலிப்புப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் வீதியோரத்தில் நின்ற பனைமரம் ஒன்று வெட்டப்பட்டது. இவ்வாறு வெட்டப்பட்ட பனைமரம் மின்சாரக் கம்பி மீது விழுந்தது.
பனை விழுந்ததால் மின்சார கம்பி அறுந்து வீதியில் நின்ற பெண்ணொருவரின் மோட்டார் சைக்கிள் மீது முட்டியது. இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் இருந்த பெண் தூக்கி வீசப்பட்டார்.
அவர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவத்தில் ஐந்து மின் கம்பங்கள் முறிந்து சேதமாகின. இதனால் அப்பகுதிக்கு நேற்று முன் தினம் பிற்பகல் வேளையில் இருந்து மின்சாரம் தடைப்பட்டது. மின்சார இணைப்பினை சீர் செய்யும் நடவடிக்கையில் இலங்கை மின்சார சபையினர் ஈடுபட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)