
posted 17th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
நாகபட்டினம் - காங்கேசன் கப்பல் சேவை 3 நாட்களே
நாகபட்டினம் - காங்கேசன்துறை இடையே 40 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நேற்று முன்தினம் சனிக்கிழமை தொடங்கியது. இந்த நிலையில், நேற்றைய தினம் (15) நடைபெறவிருந்த கப்பல் சேவை இரத்தானது.
இந்த நிலையில், வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே நாகபட்டனம் - காங்கேசன்துறை கப்பல் சேவை நடத்தப்படும் என்று கப்பல் சேவையை முன்னெடுக்கும் கே. பி. வி. ஷாய்க் மொஹமட் ராவுத்தர் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளிலேயே இந்த கப்பல் சேவை முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் தீ விபத்து காரணமாக நிறுத்தப்பட்டது. நாகை - இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
இதற்காக மத்திய அரசு ஒதுக்கிய 3 கோடி (இந்திய) ரூபாய் நிதியில் தமிழக அரசு மூலம் நாகை துறைமுகத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக செரியாபானி என்ற கப்பல் கொச்சியில் இருந்து நாகைக்கு கொண்டு வரப்பட்டு கடந்த 8, 9ஆம் திகதிகளில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)