
posted 5th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வுக்கான நிதி கையிருப்பில்
முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வுக்கு ஒதுக்கப்பட்ட நிதி இன்னும் கையிருப்பில் இருக்கிறது என்று முல்லைத்தீவு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், முன்னர் ஒதுக்கிய 56 இலட்சம் ரூபாயில் இன்னும் ஒரு வார காலத்துக்கு அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் தீர்மானத்துடன் தொடர்ந்தும் அகழ்வை முன்னெடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலர் க. கனகேஸ்வரன் தெரிவிக்கையில்,
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுக்கு 56 இலட்சம் ரூபாய் முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டது. இதில், பந்தல், மலசலகூடம் அமைப்பதற்காக 20 இலட்சம் செலவிடப்பட்டது. அகழ்வில் ஈடுபடும் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு விட்டன. சட்ட மருத்துவ அதிகாரிகளுக்கான கொடுப்பனவு வழங்க வேண்டியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஒதுக்கப்பட்ட 56 இலட்சம் ரூபாயில் 26 இலட்சம் ரூபாயே இதுவரை செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதி மூலம் இன்னும் ஒரு வார காலத்துக்கு அகழ்வு பணிகளை மேற்கொள்ள முடியும் என்றார்.
முன்னதாக, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு பணிக்குரிய நிதி இல்லை என முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் நேற்று (04) புதன்கிழமை தன்னிடம் தெரிவித்தார் என்றும் ஏற்கனவே அகழ்வுப்பணிகள் மேற்கொண்டமைக்கான கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் முல்லைத்தீவு சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.