
posted 29th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கல்முனை மெற்றோ பொலிட்டனின் 5ஆவது ஆண்டு நிறைவு விழா
கல்முனை மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் 5ஆவது ஆண்டு நிறைவு விழா கல்லூரி வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கல்லூரியின் தவிசாளரும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்ற விழா கொண்டாட்டங்களில் முக்கிய நிகழ்வாக நடைபவணி ஒன்றும் இடம்பெற்றது.
இதில் கல்லூரி மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுடன் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரமுகர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள கல்லூரி வளாகத்தில் இருந்து ஆரம்பமான இந்நடை பவணி சாய்ந்தமருது பிரதான வீதி மற்றும் உள்ளுர் வீதிகளுடாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.
இந்நடைபவணிக்கு முன்னதாக தேசியக் கொடி மற்றும் கல்லூரியின் கொடி என்பன ஏற்றப்பட்டு விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது. மெளலவி எம்.எம். ஜமால்தீன் துஆப் பிரார்த்தனையை மேற்கொண்டார். இதன்போது பலஸ்தீன் மீட்புக்காகவும் காஸா மக்களுக்காகவும் துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
விழாவின் மற்றொரு முக்கிய அம்சமாக ஒரு இலட்சம் பெறுமதியான கற்கை நெறியை முற்றிலும் இலவசமாக பயில்வதற்காக 10 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது. குலுக்கல் முறையில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இவ்விழாவில் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கல்லூரியின் கல்விச் செயற்பாடுகளை விபரிப்பதற்கான ஊடகவியலாளர் மாநாடு ஒன்றும் நடத்தப்பட்டது.
மழைக்கு மத்தியிலும் மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் 5 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)