
posted 30th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஏறாவூர் வைத்தியசாலைக்கு டயலசிஸ் இயந்திரம்
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, வைத்தியசாலையின் குறைபாடுகள் மற்றும் தேவைப்பாடுகளை நேரடியாக கண்டறிந்து கொண்டதுடன் அவற்றை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து டொக்டர் சசிகுமார் தலைமையிலான நிருவாகத்தினருடன் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது வெளிநோயாளர் பிரிவு மற்றும் மாதாந்த சிகிச்சைக்கு (கிளினிக்) வரும் நோயாளர்களின் அசௌகரியங்களை நிவர்த்தி செய்வது குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் ஏறாவூர் பிரதேச சிறுநீரக நோயாளிகள் தங்களது குருதி கழிவகற்றல் சிகிச்சைகளுக்காக (டயலசிஸ்) தூர இடங்களிலுள்ள வேறு வைத்தியசாலைகளுக்கு செல்வதிலுள்ள அசௌகரியங்களை கருத்தில் கொண்டு, ஏறாவூர் வைத்தியசாலைக்கு டயலசிஸ் இயந்திரம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் தனக்கு நெருங்கிய சில கொடை வள்ளல்கள் அதனைக் கொள்வனவு செய்து அன்பளிப்பாக வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாகவும் இதன்போது அலி ஸாஹிர் மௌலானா எம்.பி. சுட்டிக்காட்டியதுடன் அதனை இங்கு பொருத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினார்.
மேலும், வைத்திய அத்தியட்சகரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை உடனடியாக சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக குறிப்பிட்ட அவர், ஏற்கனவே தனது முயற்சியினால் கொண்டு வரப்பட்ட கட்டடத் தொகுதியின் எஞ்சிய வேலைத் திட்டங்களை பூர்த்தி செய்து, சகல வசதிகளும் கொண்ட ஒரு வைத்தியசாலையாக இதனை துரிதமாக மாற்றியமைக்க முயற்சிப்பதாகவும் இதற்கு வைத்தியசாலை நிருவாகத்தின் பூரண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)