
posted 9th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பைசால் காசிம் ஆரம்பித்து வைத்தார்
அம்பாறை மாவட்டம், காரைதீவு செயலகப் பிரிவிலுள்ள மாளிகைக்காடு பிரதேசத்தில் உக்கிரமடைந்துள்ள கடலரிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் முயற்சியினால் அலைத் தடுப்புச் சுவர் அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் பிரகாரம் கடலரிப்பைத் தடுப்பதற்கான நிரந்தரத் தீர்வாக கரைக்குக் குறுக்காக கல் வீதி அமைப்பதற்கான பூர்வாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாளிகைக்காடு கிழக்கு வட்டார அமைப்பாளர் எம்.எச்.நாஸர் தலைமையில் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் பேஷ் இமாம் மின்ஹாஜ் மௌலவியின் துஆப் பிரார்த்தனையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பிரதம அதிதியாக பங்கேற்றிருந்தார்.
இதன்போது அவர் உரையாற்றுகையில்; தான் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் இத்திட்டத்தை மிக விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையாக உதவிய ஜனாதிபதிக்கு விஷேட நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.
அத்துடன் இப்பிரதேச மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் இவ்வேலைத் திட்டத்தை குறுகிய காலத்தினுள் துரிதமாக நிறைவு செய்யுமாறு பொறியியலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை அவர் வேண்டிக் கொண்டார்.
அதேவேளை இவ்வேலைத் திட்டம் இவ்வளவு விரைவாக ஆரம்பமாவதற்கு அயராது உழைத்த பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அவர்களுக்கு அதிகாரிகள் மற்றும் பொது அமைப்பினரால் இதன்போது நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் ஜெ.ஜெகராஜன், கரையோரம் பேணல் தினைக்களத்தின் கிழக்குப் பிராந்திய பொறியியலாளர் எம்.துளசிதாஸன், அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் செயலாளர் முஹம்மத் ரஊபி, மாளிகைக்காடு மீன் மொத்த வியாபார சங்கத்தின் தலைவர் எம்.நெளஷாத், செயலாளர் எம்.பைசர் மற்றும் உறுப்பினர்கள், ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.எம்.அனுவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)