
posted 30th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பெரிய தந்தையை அடித்துக் கொன்ற படைச் சிப்பாய்!
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் தனது பெரியப்பாவை அடித்துக் கொன்ற இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில்குஞ்சன் குடியிருப்பில் நேற்று முன் தினம் (28) மாலை இந்த சம்பவம் நடந்தது.
சம்பவம் நடந்தபோது இருவரும் மதுபோதையில் இருந்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞன், இராணுவத்தில் பணியாற்றுகிறார்.
குறித்த சம்பவத்தில் தம்பிப்பிள்ளை மார்க்கண்டு (வயது 71) கைவேலி பகுதியை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.
இரு குடும்பத்துக்குமிடையில் சில காலமாக பகை நிலவி வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை, இளைஞன் மதுபோதையில் பெரியப்பாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சற்று நேரத்தின் பின் இளைஞனின் வீடு தேடிச் சென்ற பெரியப்பா தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவரும் மாறிமாறித் தாக்கியுள்ளனர்.
இளைஞன் மண்வெட்டிப் பிடியினால் பெரியப்பாவை தாக்கியதில் அவர் தலையில் படுகாயமடைந்தார். உடனடியாக புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இராணுவத்தில் பணியாற்றும் இளைஞனும், பெரியப்பாவின் தாக்குதலில் காயமடைந்துள்ளார். அவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)