
posted 6th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தலைமன்னார் - இராமேஸ்வரம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்
“தலைமன்னார் - இராமேஸ்வரம் கப்பல் சேவையை நடத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்திய பயணத்தின்போது அந்நாட்டு துறைமுக அதிகாரிகளுடனும் இதுதொடர்பில் கலந்துரையாட நடவடிக்கை எடுப்பேன்”, என்று துறைமுகங்கள் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
நேற்று (05) வியாழக்கிழமை பாராளுமன்ற அமர்வில் ரிஷாத் பதியுதீன் எம். பி., தலைமன்னார் - இராமேஸ்வரத்துக்கு இடையிலான கப்பல் சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அண்மையில், விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்றவகையில் நீங்கள் மன்னார் பகுதிக்கு சென்று நேரடியாக நிலைமைகளை பார்வையிட்டீர்கள். அந்த வகையில் அது தொடர்பில் மேற்கொண்டுள்ள இருக்கும் முன்னோடி நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிமால் சிறீபால டிசில்வா, தற்போது தலைமன்னார் - இராமேஸ்வரம் கப்பல் சேவை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தலைமன்னாரில் ஏற்கனவே, காணப்பட்ட இறங்குதுறை உபகரணங்கள் மற்றும் பகுதிகள் அழிவடைந்துள்ளன. அவை திருத்தப்பட வேண்டும்.
தேவையான உபகரணங்கள் தற்போது அங்கு கொண்டு செல்லப்படுகின்றன. சுமார் ஆறு மாதங்களில் அந்த நடவடிக்கைகளை நிவர்த்தி செய்ய முடியும். இந்தத் திட்டத்துக்காக எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் 60 கோடி ரூபாயை பெற்றுக் கொள்வதற்கான யோசனையை முன்வைத்துள்ளேன்.
அத்துடன், எதிர்வரும் 16ஆம் திகதி நான் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளேன். அங்கு கப்பல் துறை அதிகார சபை உள்ளிட்ட அதிகாரிகளுடன் அது தொடர்பில் பேச்சு நடத்துவேன். இந்த கப்பல் சேவையை நடத்துவதில் அங்குள்ள தரப்பினரும் தயாராக வேண்டியுள்ளது அந்த நடவடிக்கைகள் முடிவுற்றதும் இந்த கப்பல் சேவையை ஆரம்பிக்க முடியும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)