
posted 12th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சந்நிதியான் ஆச்சிரமத்தின் உதவிகள்
மலையகத்தில் மின்னொழுக்கால் இருப்பிடத்தை இழந்த 9 குடும்பங்களுக்கு பல்வேறு உதவுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
பதுளை - மாப்பாகல பிரிவில் உள்ள யூரித் தோட்ட குடியிருப்பில் ஏற்பட்ட மின் கசிவால் 09 வீடுகள் எரிந்து உடமைகள் முழுமையாக அழிந்த நிலையில் தற்காலிகமாக பதுளை மாப்பாகல தமிழ் வித்தியாலயத்தில் தங்கியிருக்கும் 9 குடும்பங்களுக்கும், ரூபா 150,000 பெறுமதியான சமையல் உபகரணங்கள், படுக்கை விரிப்புக்கள், தலையணைகள் மற்றும் 14 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், பாடசாலை சீருடைகள், புத்தக பைகள் என்பன வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
மேலும் காலி மாவட்டம் - உடுகம கல்வி வலயத்தை சேர்ந்த கஸ்ட பிரதேசத்தை உடைய தலங்கனாவில் அமைந்துள்ள தமிழ் மொழி பாடசாலையான கா/ சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய ஆலயத்திற்கு, கருங்கற்கலிலான சரஸ்வதி, இலட்சுமி ஆகிய இரு விக்கிரகங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், மணி, கலசம், பூசைப் பொருட்கள் என்பன ரூபா 100000 பெறுமதியில் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
குறித்த பாடசாலையில் சிறு தோட்ட தொழிலாளர்களுடைய பிள்ளைகளே கல்வி கற்றுவருகின்றனர். இதனாலேயே குறித்த மாணவர்கள் வழிபடுவதற்கென பாடசாலையில் ஆலயம் அமைப்பதற்க்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை மன்னார் மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள காத்தான்குளம் மன்/31 கிராம நிர்வாக பிரிவில் உள்ள அலுவலகத்தில் 62 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களை மாவட்ட ரீதியாக தெரிவு செய்து 217,000 ரூபா பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் சுய உதவி அமைப்பின் செயலாளர் செல்வி.செ. கொன்சலிற்றா, மாவட்ட போராளிகள் நலன்புரிச் சங்க தலைவர் செ. சீசர், செயலாளர் தயே.ஜெபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மன்னார் - கள்ளியடி, கத்தாளம்பிட்டி கிராமத்தில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றினை நேரடியாக பார்வையிட்டு மலசலகூடம் கட்டுமானப் பணிக்கும், வீட்டுக்கான கதவுகள் பொருத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் வவுனியா வடக்கு நெடுங்கேணி, மாமடுச்சந்தி கற்பகா அறநெறிப் பாடசாலையை சேர்ந்த 27 மாணவர்களின் குடும்பங்களை தெரிவு செய்து 94,500 ரூபா பெறுமதியான அத்தியவசிய உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
மேலும் புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மாணவன் ஒருவனுக்கும், தலா 45000/- ரூபா பெறுமதியான 02 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
கேப்பாப்பிளவு கிராமத்தை சேர்ந்த யா/ சென்ஜோன்ஸ் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவனுக்குமே துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இவ் உதவித்திட்டங்களை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் சென்று நேரடியாக வழங்கி வைத்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)