
posted 5th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
உள்ளக பொறிமுறையில் இனப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தவறு
உள்ளக பொறிமுறையில் தமிழ் மக்களின் இனப்பிரச்னைக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தவறானது என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (04) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றபோது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பல நீதிபதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல்கள் காணப்பட்ட போதும் நீதிபதி ரி. சரவணராஜாவே அதை வெளிப்படுத்தியுள்ளார். அரசியல் தலையீடு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களினுடைய நேரடி அச்சறுத்தல் காரணமாக நீதித்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய கடமையை செய்வதை தடுத்து அவரை அச்சுறுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய இனம் சார்ந்து ஒற்றுமையாக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகிறது. .
இந்த நாடும், அரசாங்கமும் எங்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு நீதி துறையை சுயமாக இயங்க அனுமதிக்க வேண்டும். அதை சர்வதேசம் உறுதிபடுத்த வேண்டும் என்ற மக்களின் உணர்வுகளை இந்த ஆர்ப்பாட்டம் வலியுறுத்துகிறது.
இதற்கு முன்னரும் பல நீதிபதிகளுக்கு அரசியல்வாதிகளிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருந்தாலுமே அவை வெளிப்படையாக இருந்ததில்லை. அச்சுறுத்தலுக்கு மேலாக மன அழுத்தம் உருவாகி ஒரு நீதிபதி நாட்டை விட்டு வெளியேறுகின்ற சூழ்நிலை இதற்கு முன்னர் காணப்பட்ட போதும் தற்போது ரி. சரவணராஜா அதை வெளிப்படையாக செய்துள்ளார்.
“ஏற்கனவே உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை என்பதை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் இப்பொழுது அது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்ளக பொறிமுறையின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தவறானதோடு அது சாத்தியமற்றது என்றும் கூறினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)