வாசிப்பின் அவசியம் - விழிப்புணர்வால் விளக்கும் பேரணி

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச பிரதேச சபை சம்மாந்துறை கல்வி வலயத்திலுள்ள கமு/சது/றாணமடு இந்துக் கல்லூரியுடன் இணைந்து வாசிப்பின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் மாபெரும் விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் என்பவற்றை சிறப்பாக நடாத்தினர்.

நாவிதன்வெளி பிரதேச சபை நூலகர் எஸ். கோபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள்,

  • "நூலைத் தேடு உலகம் உன்னைத் தேடும்"
  • "உலகில் சாகாவரம் பெற்ற பொருட்கள் நூல்கள்"
  • "உடல் உறுதிக்கு உடற் பயிற்சி போல் உள உறுதிக்கு வாசிப்பு பயிற்சி"
  • "நல்ல நூல்களே சிறந்த நண்பனும் உறவினருமாவான்"
  • "வாசிப்பவன் சிந்திக்கின்றான் வாழ்வில் முன்னேறுகின்றான்"

போன்ற வாசகங்களைத் தாங்கியவண்ணம் பேரணியாகச் சென்றனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் அ. ஆனந்த இப் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி பெறுமதி வாய்ந்த நூல்களை கொள்வனவு செய்வதற்காக தனது சொந்த நிதியில் இருந்து ஐம்பதாயிரம் ரூபா பணத்தை இக் கல்லூரி அதிபர் க. கதிரைநாதனிடம் அன்பளிப்பு செய்தார். இந் நிகழ்வில் ஆசிரியர்களான வீ. சுதேசன், கு. டினேஸ். மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ. கே. அப்துல் சமட் பிரதேச சபை உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

வாசிப்பின் அவசியம் - விழிப்புணர்வால் விளக்கும் பேரணி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)