
posted 10th October 2022
தமிழ் வளர்த்த இருபெரும் அறிஞர்களான சுவாமி விபுலானந்தர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோரின் சிலைகள் இன்று யாழ். நகரில் திறந்து வைக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் - மானிப்பாய் - காரைநகர் வீதியில் யாழ்ப்பாணம் நுழைவாயிலில் யாழ். மாநகர சபையின் உறுதுணையுடன் அகில இலங்கை சைவ மகா சபையால் விபுலானந்தரின் உருவச் சிலை நிறுவப்பட்டது. யாழ். மாநகர சபையால் சுப்பிரமணிய பாரதியாரின் சிலை நிறுவப்பட்டது.
விபுலானந்தரின் சிலையை தென்கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளாரும், யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணனும் இணைந்து திறந்துவைத்தனர்.
இதேபோன்று, பாரதியார் சிலையை யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராசாவும் யாழ். மாநகர முதல்வரும் இணைந்து திறந்துவைத்தனர்.
இந்த நிகழ்வில், சுவாமி விபுலானந்தரின் சிலையை வடிவமைத்த சிற்பியான புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி ஆசிரியர் உ. கயேந்திரன் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரால் கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், அகில இலங்கை சைவ மகா சபையின் பிரதிநிதிகள், சமூக செயல்பாட்டாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)