
posted 26th October 2022
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ங்களில் காட்டு யானைகளின் தொல்லையால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகிவருகின்றனர்.
இந்த மாவட்டங்களில் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பிரதேசங்களிலும், தென்னந் தோட்டங்கள், மேட்டு நில மற்றும் விவசாயப் பண்ணைகளுக்குள்ளும் புகுந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றது.
குறிப்பாக குடியேற்றக் கிராமங்கள் பலவற்றில் மக்கள் இரவு பகலாக யானைத்தாக்கம் குறித்த பெரும் அச்சத்துடனேயே வாழவேண்டிய நிலமைக்கு உட்பட்டுள்ளதுடன், விளைபயிர்கள், தென்னந் தோட்டங்கள், கட்டிடங்கள் சேதமுறும் நிலமையும் தொடர்ந்து வருகின்றது.
காட்டு யானைகளின் இத்தகைய பிரவேசங்களைத் தடுக்க ஆவண செய்யுமாறும், யானை வேலிகளை அமைத்து தமக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு பொது மக்கள் விடுத்துவரும் கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்கின் நிலையிலேயே உள்ளதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நேற்றிரவு (25) அக்கரைப்பற்று சின்ன முல்லைத்தீவுப் பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.
இதன்போது குறிப்பாக சின்ன முல்லைத்தீவு ஜும்ஆப்பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள இரு அறைகளைக் கொண்ட கட்டிடமொன்றும், பள்ளிவாசல் சுற்றுமதிலும் யானைகளால் சேதமாக்ககப்பட்டுள்ளன.
யானை – மனிதன் மோதலுக்கு என்றுதான் முற்றுப் புள்ளி வைக்கப்படுமோவெனப் பலரும் அங்கலாய்க்கின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)