
posted 24th October 2022
ஊரெழு பொக்கனை பகுதியில் நீண்டகாலமாக இடம்பெற்ற சட்டத்துக்கு புறம்பான கசிப்பு உற்பத்தி நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உற்பத்தியில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன் மேலும் இருவர் தப்பித்த நிலையில் தேடப்படுகின்றனர் என்று பொலிஸார் கூறினர்.
ஞாயிற்றுக்கிழமை (ஒக்.23) அதிகாலை ஒரு மணிக்கு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தித்துக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் உதித் லியனகேயின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரே இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
"ஊரெழு பொக்கனை பகுதியில் 20 பரப்பு காணிக்குள் உள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றுக்கு கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். எனினும் கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுக்காது அசமந்தமாக விட்டுள்ளனர்.
அதுதொடர்பில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஞாயிறு (23) அதிகாலை சென்ற போது அங்கு கசிப்பு உற்பத்தி இடம்பெற்றது.
பொலிஸாரைக் கண்டதும் இருவர் தப்பித்த நிலையில் ஏனைய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடா 200 லீற்றர், 60 லீற்றர் ஸ்பிறிட் மற்றும் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்" என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.