மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பிலும் வலியுறுத்த வேண்டும்

வடகிழக்கில் தமிழர்களின் நிலங்களைக் குறிவைத்து வனவளம், வனஇலாக, தொல்பொருள், மகாவலி அபிவிருத்தி போன்ற துறைகள் செயற்படுகின்றன. மாகாணசபைத் தேர்தல் நடைபெறாமையால் ஆளுநர்கள் தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ற விதத்தில் மாகாணசபைகளின் நிருவாகத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த வேளையிலே உள்ளுராட்சித் தேர்தலைப் பிற்போடக் கூடாது என்று கூக்குரலிடும் எதிர்க்கட்சிகள் மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பிலும் வலியுறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 1978ம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு 44 வருடங்களில் 22வது தடவையாக திருத்தமாக பாராளுமன்றத்திலே நிறைவேறியிருக்கின்றது.
அதனை விட தற்போது எதிர்க்கட்சிகளிடையே முக்கிய பேசுபொருளாக இருப்பது எதிர்வரும் 2023ம் ஆண்டு பெப்ரவரி இறுதியுடன் கலையவிருக்கின்ற உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்களை அரசு பிற்போடக் கூடாது. அவ்வாறு பிற்போடும் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து நீதியை நாட வேண்டி ஏற்படும் என கடந்த பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி உடன்பாடு எட்டப்பட்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

என்னைப் பொருத்தமட்டில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எக்கரணம் கொண்டும் பிற்போடப்படக் கூடாது. இருந்தாலும் அதற்கு மேலாக மாகாணசபைத் தேர்தல் என்பது நீணடகாலமாக நடைபெறாமல் இருக்கின்றது. கிழக்கு மாகாணம் கலைக்கப்பட்டு ஐந்து வருடங்களும், வடக்கு மாகாணம் கலைக்கப்பட்டு நான்கு வருடங்களும் நிறைவடைந்துள்ளன.

1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தினூடாக உருவாகிய இந்த மாகாணசபைகள் குறிப்பாக வடக்கு கிழக்கு இனப்பிரச்சனையையொட்டி, இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வாக இதனைத் தமிழ் தரப்புகள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டவைகளே மாகாண சபைகள்.

மாகாண சபைகள் இருந்த காலத்திலே நாங்கள் எங்களது பிரதேசங்களை ஓரளவிற்குக் காப்பாற்றி வைத்திருந்தோம். இந்த மாகாண சபைகள் கலைக்கப்பட்டு மாகாணசபைத் தேர்தல் நடைபெறாமல் ஆளுநரின் ஆட்சியின் கீழ் இந்த மாகாண சபைகள் இருப்பதனால் மத்திய அரசு, ஜனாதிபதி நினைப்பதை ஆளுநர்கள் நிறைவேற்றுவதும், ஆளுநர்கள் தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ற விதத்தில் தங்களின் இஸ்டத்திற்கு இந்த மாகாணசபைகளின் நிருவாகத்தை நடத்துவதுமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயவின் வியத்மக அமைப்பிலே முக்கிய உறுப்பினராக இருப்பவர். இவர் கிழக்கு மாகாணத்தின் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு மாத்திரமல்லாமல் கிழக்கு மாகாணத்திற்கென்று உருவாக்கப்பட்ட விசேட தொல்பொருள் செயலணி ஊடாக எமது புராதனச் சின்னங்கள், சமய வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றைக் கூட கையகப்படுத்தும் கைங்கரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றார். அதற்கேற்ற விதத்தில் அந்த தொல்பொருள் செயலணியும் செயற்படுகின்றது.
வடக்கு கிழக்கில் தமிழர்களின் நிலங்களை குறிவைத்து வனவளம், வனஇலாக, தொல்பொருள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி போன்ற நான்கு துறைகளும் செயற்படுகின்றன. இவை தமிழ் மக்களிடம் இருந்து அவர்களின் நிலவளத்தைப் பறிப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இவைகள் தடுக்கப்பட வேண்டுமாக இருந்தால் மாகாணசபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

கடந்த சுதந்திரக் கட்சி ஆட்சியிலே அமைச்சராக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா கூட தற்போது மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முக்கியத்துவத்தைக் கூறியிருக்கின்றார். அத்துடன் கடந்த ஐநா மனித உரிமைகள் ஆணையகக் கூட்டத்தொடரில் கூட இந்தியா ஒரு உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்தது. இலங்கைக்கு எதிராகப் பிரித்தானியாவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை மீதான விவாதத்திலே இலங்கையில் மாகாணசபைத் தேர்தல்கள் மிக விரைவாக நடைபெற வேண்டும். மாகாணசபைகளுக்கான முழு அதிகாரங்கள் வழங்கப்பட்டு வடக்கு கிழக்கலே தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றது.

இந்த வேளையிலே உள்ளுராட்சி மன்றத் தேர்தலைப் பிற்போடக் கூடாது என்று கூக்குரலிடும் எதிர்க்கட்சிகள் உண்மையான இன ஐக்கியம், அனைத்து மக்களும் சமமாக வாழ வேண்டும் என்று உண்மையாக நினைத்தால் மாகாணசபைத் தேர்தல்கள் உடன் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.

வடக்கு கிழக்கை முதன்மைப்படுத்தியே மாகாணசபைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், வடகிழக்கு மாகாணசபைகள் அனுபவித்த பிரதிபலன்களை விட கூடுதலான பிரதிபலன்களை ஏனைய மாகாணசபைகள் அனுபவித்திருக்கின்றார்கள் என்பதனைக் கருத்திற்கொண்டு ஒட்டுமொத்தமாக ஒன்பது மாகாணசபைகளுக்குமாக மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பிலும் வலியுறுத்த வேண்டும்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)