
posted 31st October 2022
மன்னார் நிலையை அறிந்து செல்வதற்கு ஒரு குழுவாக வந்திருக்கின்றீர்கள். மன்னார் மக்கள் வாழ்வாதாரத்தில் நலிந்து காணப்படுகின்றனர். மன்னார் தீவு வெகு விரைவில் கடலுக்குள் அமிழ்ந்து போகும் அபாயத்துக்குள் உள்ளாகி விட்டது. இதை உங்கள் பகுதியில் மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். என மன்னார் பிரஜைகள் குழுவின் ஆளுநர் சபையின் உறுப்பினரும் தலைமன்னார் பங்குத் தந்தையுமான அருட்பணி மாக்கஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
அனுராதப்புரம் கறிற்றாஸ் நிறுவனத்தின் இயக்குனர் அருட்பணி மெனட் மெல்லவ அடிகளாரின் தலைமையில் சர்வ மதங்களையும் சார்ந்த 31 நபர்கள் கொண்ட பலதரப்பட்ட பாடசாலை ஆசிரியர் மதத் தலைவர்கள் இருபாலாரும் கொண்ட குழாம் ஒன்று சனிக்கிழமை (29.10.2022) இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு மன்னாருக்கு வருகை தந்திருந்தபொழுது மன்னார் பிரஜைகள் குழுவினரை சந்தித்தனர்.
இதன்போது மன்னார் பிரஜைகள் குழுவின் ஆளுநர் சபையின் உறுப்பினரும் தலைமன்னார் பங்குத் தந்தையுமான அருட்பணி மாக்கஸ் அடிகளார் இவ் குழுவினருக்கு மன்னாரின் நிலையை விளக்கி கூறுகையில்
கடந்த காலம் கடந்ததாகட்டும். இனிமேல் நாம் நிகழ்கால வாழ்க்கையைப்பற்றியே சிந்திக்க வேண்டும்.
இனியும் நாம் காலத்தை வீணே கடத்த முடியாது. இனியும் இவ் நாட்டு மக்கள் ஒன்றித்து வாழ முணையாவிடில் நாம் நிம்மதியாக வாழ முடியாத கட்டத்துக்கு வந்து விட்டோம்.
மன்னார் மாவட்டத்தை பொறுத்தமட்டில் இங்குள்ள மக்கள் ஒற்றுமையாகவே வாழ்ந்தவர்கள். ஆனால் இங்கு தற்பொழுது அரசியல் மக்களை கூறு போட்டுள்ளது..
இனியாவது எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என சிந்திப்பதே சாலச் சிறந்ததாகும்.
இலங்கை அணி கிரிக்கெட் போட்டியில் ஈடுபடும்போது மன்னாரில் மின்சாரம் தடைப்பட்டு விட்டால் இங்குள்ள இளைஞர்கள் கொதித்தெழுகின்றனர்.
இதை எதைக் காட்டுகின்றது என்றால் எமது இளைஞர்கள் இன்னும் நாட்டுப்பற்றுடனே காணப்படுகின்றனர்.
மன்னார் தீவு 4 கிலோ மீற்றர் அகலமும் 20 கிலோ மீற்றர் நீளமும் கொண்டவை. ஆனால் இந்த மன்னார் தீவில் வடக்கு மற்றும் தெற்கு கடற்கரையோரமாக மீனவர்கள் குடியிருக்கும் பகுதியில் காற்றாலை அமைக்கப்படுவதால் மீனவர்கள் பாதிப்பு அடைவது ஒருபுறமிருக்க கனியவள மணல் அகழ்வால் விரைவில் மன்னார் தீவு கடலுக்குள் அமிழ்ந்துபோகும் அபாயம் தோன்றியுள்ளது.
பாடசாலை வளங்கள் இங்கு சமமாகப் பகிரப்படுவதில்லை. மன்னார் பெருந்நிலப்பரப்பு பகுதியில் விவசாயமும் காலநடையுமே பிரதான தொழிலாக காணப்படுகின்றது.
ஆனால் இன்னும் கால்நடைக்கு மேய்ச்சல் நிலம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
மன்னாரில் போதைப் பொருள் இறக்குமதியும் பாவனையும் அதிகம். இது பொலிசாருக்கும் அதிகாரிகளுக்கும் நன்கு தெரியும். ஏவ்வாறு கடத்தப்படுகின்றது விற்பனையாளர்கள் பாவனையாளர்கள் யார் என்பது வெளிச்சம். ஆனால் கண்மூடிக் கொண்டு இருக்கின்றார்கள். இதனால்தான் போதைப் பொருள் அதிகரித்துச் செல்லுகின்றன என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)