மன்னாரில் வங்காலை மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

மன்னார் மாவட்டத்தில் வங்காலை கிராம மீனவர்களுக்கு இங்கு வரும் எரிபொருளை சரியான முறையில் பகிர்ந்தளிப்பதில்லையென தெரிவித்தும், இதனால் மீனவர் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதை கண்டித்தும், இதற்கு அமைச்சர் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வங்காலை கிராம மீனவர்கள் பல நூற்றுக்கணக்கானோர் கவனயீப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

செவ்வாய் கிழமை (18.10.2022) காலை இடம்பெற்ற இப் போராட்டம் மன்னார் தீவு நுழைவாயிலாக விளங்கும் பாலத்திலிருந்து கடற்தொழில் நிரியல் வள திணைக்களத்துக்கும் மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்துக்கும் சென்று மகஜர்களை கையளித்தனர்.

இம் மீனவர்கள் இக் கவனயீர்ப்பு போராட்டத்தின்போது பல வாசகங்கள் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான போராட்டமாக முன்னெடுத்துச் சென்றனர்.

வங்காலை மீனவர்களாகிய நாங்கள் இன்று செவ்வாய் கிழமை (18.10.2022) ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததுக்கு காரணம், மீனவர்களாகிய எங்களுக்கு எரிபொருள் பற்றாக்குறையால் தொழில் செய்ய முடியாத நிலை இருந்து வருகின்றது.

ஏங்கள் கிராமத்தில் ஆயிரம் மீனவ குடும்பங்கள் இருக்கின்றன. எங்களுக்கு பத்து நாளைக்கு ஒரு முறை கிடைக்கும் ஐந்து லீற்றர் மண்ணெணெயை சேர்த்து வைத்துதான் நாங்கள் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கின்றது.

இனிவரும் காலம் எங்களுக்கு மீன்பிடிக்கான பருவ காலம் இதைக் கவனத்தில் எடுத்த நிலையில், நீரியல் வளத்துறை அமைச்சர், இதன் திணைக்களம் மற்றும் அரசாங்க அதிபர் உற்பட யாவருக்கும் எங்கள் அவலநிலையை எடுத்துக்காட்டும் முகமாக நாங்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

புதினைந்து நாளைக்கு ஒரு முறை ஆயிரம் லீற்றர் மண்ணெணெய் மட்டுமே வங்காலை மீனவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடான காலத்தில் எமக்கு இரண்டாயிரம் தொடக்கம் மூவாயிரம் எரிபொருள் தரப்பட்டதில் தற்பொழுது இவை குறைக்கப்பட்ட நிலையிலேயே மீன்பிடிக்கான எரிபொருள் தரப்படுகின்றது.

எங்களிடம் இருநூறு படகுகள் காணப்படுகின்றன. இவற்றுக்கு இவற்றை பிரித்துக் கொடுத்தால் ஒரு முறைக்கு ஐந்த லீற்றர் மண்ணெணெய்யே கிடைக்கப் பெறுகின்றது. அதுவும் பதினைந்து நாளைக்கு ஒருமுறை.

இந்த எரிபொருளை வைத்தக் கொண்டு எமது மீனவர்கள் நாளாந்த தொழிலில் ஈடுபட முடியாது.

ஆகவே, எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வரும் எரிபொருளை சரியான முறையில் பங்கீடு செய்ய வேண்டும் என நாங்கள் கேட்டு நிற்கின்றோம்.

மேலும் நாங்கள் எரிபொருள் நிலையத்துக்குச் சென்று இது தொடர்பாக விசாரிக்கும்போது அவர்களிடமிருந்து கிடைக்கும் பதில் தனியார் தங்களுக்கு டொலர் வழங்கி எரிபொருள் எடுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனாலேயே முன்னையவிட தற்பொழுது உங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் குறைக்கப்பட்டுள்ளது எனவும் எமக்கு தெரிவிக்கப்படுகின்றது என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் வங்காலை மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)