
posted 24th October 2022
போதைப்பாக்குடன் பாடசாலைக்கு வந்த மாணவன், தனது கையைப் பிளேட்டால் அறுத்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தெல்லிப்பளைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
குறித்த மாணவன் போதை ஊட்டிய பாக்குடன் பாடசாலைக்கு சென்றுள்ளார். அது தொடர்பில் அறிந்த ஆசிரியர்கள் மாணவனிடம் விசாரணைகளை முன்னெடுத்துப் போதைப் பாக்கையும் மீட்டனர்.
அதையடுத்து அதிபர் ஊடாக அப்பகுதி சுகாதாரப் பரிசோதகருக்குச் சம்பவம் தொடர்பில் அறிவித்தபோது , குறித்த மாணவன் தனது கையைப் பிளேட்டால் வெட்டினார். இதனால் காயத்துக்குள்ளன மாணவன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
மாணவனுக்கு எங்கிருந்து போதைப் பாக்கு கிடைத்தது? போதைப் பாக்கைப் பாடசாலைக்கு அருகில் யாரேனும் விற்பனை செய்கின்றார்களா? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)