
posted 3rd October 2022
மன்னார் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஜே.ஒஸ்மன் குலாஸ், பேசாலையில் சிறுவர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் தெரிவிக்கையில், போதைப்பொருள் வியாபாரத்தால் ஈட்டும் இலாபத்தைப் பெருக்குவதற்கு சிறுவர்கள் குறிவைக்கப்படுகிறார்களென தெரிவிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் எதிர் காலத்தை நாசமாக்கவும் போதைப்பொருள் வியாபாரிகள் துணிந்து விட்டார்கள் என்று தெரிவிக்கின்றார்.
எனவே, நாங்கள் எமது பிள்ளைகள், சிறார்கள், கூறும் எதையும் மறுக்காது அவர்கள் பக்கமிருந்து அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நாம் செவிமடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் கணத்திற்குக் கணம் சந்திக்கின்ற பிரச்சனைகள் என்ன? சவால்கள் என்ன? என்பதனை அவர்களின் மழலை மொழியின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
பேசாலை பகுதியில் இந்த சிறுவர்களுக்கு அயல் கிராமத்திலிருந்து விநியோகிக்கப்படும் போதை பொருட்களால் பாதிப்பு அடைந்து வருவதை நாங்கள் தற்பொழுது இனம் கண்டுள்ளோம்.
எமது அரசும் பல்வேறுபட்ட வழிமுறைகளை கையாண்டு சிறுவர்களுக்கான பாதுகாப்புக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இவ்வேளையில், உங்கள் பிள்ளைகளுடன் மனம் திறந்து கதையுங்கள். என்ன சொல்கிறார்கள் என்று கேளுங்கள்.
அவ்வாறன நிலைமைகளுக்கு கொஞ்சம் மதிப்புக் கொடுப்போமானால் சிறார்களின் வாழ்க்கை வளம் பெறுமென நான் நம்புகின்றேன் என்று கூறினார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)