
posted 1st October 2022
ஆராய்ச்சியாளர்கள் என்ற அடிப்படையிலே நடைமுறை பிரச்சினைகளுக்கு ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுகள் ஊடாக நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்க வேண்டும் என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் ஒன்பதாவது சர்வதேச ஆய்வரங்கு பல்கலைக்கழக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தின் "அரபு மற்றும் இஸ்லாமிய ஆய்வுகள் மூலம் சமூக பொருளாதார வளர்ச்சி" எனும் தொனிப் பொருளில் இவ்வாய்வரங்கு பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதில் உரையாற்றும் போதே உபவேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
இலங்கையில் தற்காலத்தில் நிலவுகின்ற பொருளாதாரப் பிரச்சினை காரணமாக நமது நாடு பல்வேறுபட்ட பிரச்சனைகளை அனுபவித்து வருகிறது.
விசேடமாக பெற்றோலிய இறக்குமதி தடை காரணமாக மின்வெட்டு, இதனூடாக பொதுமக்களுக்கான சேவைகள், கைத்தொழில்கள் என்பன பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2.4 மில்லியன் மக்கள் உதவிகளை எதிர்பார்த்த வண்ணம் வாழ்ந்து வருகின்றனர். அதிலும் 1.7 மில்லியன் மக்கள் மிகவும் கஷ்டத்தில் வாழ்கின்றார்கள். அதில் குழந்தைகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் காணப்படுகின்றனர்.
இதன் காரணமாக நாடு பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருகிறது. இப்பொருளாதார நெருக்கடியில் இருந்து தீர்வு காண்பதற்காக இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) நிதியை பெற்றுக்கொள்வதற்கு உடன்படிக்கை செய்யவுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலமாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதுடன் நாடு முன்நோக்கி நகர்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றது.
இருந்தபோதிலும் ஆராய்ச்சியாளர்களுக்கு கடப்பாடுகள் காணப்படுகின்றன. இஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் இஸ்லாமிய நிதிகள் சம்பந்தப்பட்ட சில பொறுப்புகள் காணப்படுகின்றன. ஆகவே ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு இந்த நாட்டை முன்நோக்கி நகர்த்துவதற்கான பங்களிப்புகளை செய்ய வேண்டியதுள்ளது.
இலங்கையில் 2.4 மில்லியன் சனத்தொகையில், ஆதாவது 22 ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள் தேவைப்படும் போது, தற்போது வெறும் 5 ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள் மட்டும்தான் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக 2 ஆயிரம் ஆராய்ச்சியாளர்களே நடைமுறை ஆராய்ச்சியார்களாக இருக்கிறார்கள். ஆகவே, கூடுதலான ஆராய்ச்சியாளர்களின் தேவைப்பாடு இருக்கிறது.
ஆராய்ச்சியாளர்கள் என்ற அடிப்படையிலே நடைமுறை பிரச்சினைகளுக்கு ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுகள் ஊடாக நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்க வேண்டும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மாணவர்கள் உந்து சக்தியாக பங்களிப்பு செய்யக்கூடிய வகையில் ஆராய்ச்சிகள் இருக்க வேண்டும்.
ஆராய்ச்சியாளர்கள் சிறந்த முறையில் தங்களது ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த காலமாகும் என்றார்.
இந்நிகழ்வின் சிறப்பு பேச்சாளராக மலாயா பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் அகடமி சிரேஷ்ட பேராசிரியர் அஸ்மா அப்துல் றகுமான் சூம் தொழில்நுட்பம் ஊடாக உரையாற்றினார்.
இவ்வாய்வு அரங்கில் 49 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் "ஆய்வு சஞ்சிகையின் முதல் பிரதி மற்றும் நினைவுச் சின்னம் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் பீடாதிபதி எஸ்.எம்.எம். மஸாஹிரால் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வுக்கு பீடாதிபதிகள், நூலகர், திணைக்களத் தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY