பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்

இலங்கையின் உணவு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கைக்கான ஆரம்ப நடவடிக்கைகள் முன்னெடுகக்ப்பட்டுவருகின்றன.

இந்த மாவட்டத்தில் கால நிலை மாற்றம் காரணமாகத் தற்பொழுது மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் பெரும்போக செய்கைக்கு முன்னோடியாக நெற்காணிகளை உழுது பண்படுத்தும் வேலைகளை விவசாயிகள் ஆரம்பித்துளள்னர்.

இம்முறை அம்பாறை மாவட்டத்தில், ஒரு லட்சத்து பத்தாயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படவிருப்பதுடன், பத்தாயிரத்து இரு நூறு ஏக்கரில் கரும்புச் செய்கை மேற்கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பெரும்போக நெற்செய்கைக்கான விதைப்புப் பணிகளை எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய வேண்டுமெனவும் விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் நெற்செய்கை விதைப்பு வேலைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான எரிபொருள் விநியோகம் தடையின்றி இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை அரசினால் பெரும்போக நெற்கைக்குத் தேவையான யூரியா உரம் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை கமக்காரர் அமைப்புகளும் எடுத்து வருகின்றன.

தவிரவும் சில விவசாயக் கண்டங்களில் நீர்ப்பாசன வாய்க்கால்களைத் துப்பரவு செய்வதில் பாராமுகம் காட்டப்படுவதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.

அக்கரைப்பற்று, வாங்காமம், குடுவில் போன்ற சில பகுதிகளில் பெரும்போக விதைப்பு வேலைகளும் ஆரம்பமாகியுள்ளன.

பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)