
posted 26th October 2022
மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் எச்.ஐ.வி. (HIV) நோயாளிகள்
இலங்கையில் இவ்வருடம் இதுவரை 50 பல்கலைக்கழக மாணவர்கள் எச்.ஐ.வி. தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் எச்.ஐ.வி. தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விடவும், இவ்வருடம் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட எச்.ஐ.வி. தொற்றாளர்களில், இளம் பௌத்த பிக்குகளும் அடங்குகின்றனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாடசாலை மாணவர்கள் மாத்திரமன்றி, பல்கலைக்கழக மாணவர்களும் இவர்களில் அடங்குகின்றனர். இவ்வருடம் இதுவரை 50 பல்கலைக்கழக மாணவர்கள் எச்.ஐ.வி. தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் எச்.ஐ.வி. தொற்றாளர்களில் பெரும்பாலானோர் இளம் சமூகத்தினர் எனத் தெரியவருகின்றது.
நாட்டில் இவ்வருடம் கடந்த 9 மாதங்களில் 342 எயிட்ஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முல்லையடி பகுதியில் நடைபெற்ற வெட்டுச் சம்பவங்கள்
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் நேற்று (25) செவ்வாய்க்கிழமை மாலை அதே கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வேளை இனந்தெரியாத நபர் ஒருவரால் கத்தி வெட்டுக்கு இலக்காகி உள்ளார்.
காயத்திற்குள்ளான இளைஞன் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் யாழ் போதனா வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலமாக கொண்டு செல்லப்பட்டார்.
குறித்த இளைஞன் பளை முல்லையடி சேர்ந்த பால்ராஐ் துஷாந்தன் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இன்று (26) புதன்கிழமை குறித்த இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக பளையச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பளை பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்துள்ளதாகவும் தனிப்பட்ட தகராறு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பளை பொலிஸார் தெரிவித்தனர்.
மைத்திரி விக்கிரமசிங்க யாழ் வருகை
நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணிய வாதியுமான மைத்திரி விக்கிரமசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு முதன்மை உரை ஆற்றுவதற்காகவே அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.
புதிய இயல்பு நிலையில் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தல் ( Shaping the Future in the New Normal) என்ற தொனிப் பொருளில் நடாத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சர்வதேச ஆய்வு மாநாட்டுத் ( JUICE - 2022) தொடரில், பல்கலைக்கழக பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவ நிலையத்தினால் “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாடு எதிர்வரும் 28 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவ நிலையப் பணிப்பாளர் பேராசிரியர் சிவாணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆய்வு மாநாட்டின் முதன்மை உரையாளராக இலங்கையின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ர பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரி விக்கிரமசிங்கே கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன், “பாலினமும் அரசியலும்” என்ற தலைப்பில் குழு விவாதம் ஒன்றும் இடம்பெறவிருக்கின்றது. இவ் விவாதத்தின் நடுவராக மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமாரனும், பேச்சாளர்களாக கொழும்புப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி பவித்ரா ஜெயசிங்கே, கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் கலாநிதி சிவஞானம் ஜெயசங்கர், கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் சீ.டி.எல்.ஜி செயற்றிட்ட முகாமையாளர் ஜூட் வோல்டன், யாழ். சமூக செயற்பாட்டு மைய இணைப்பாளர் நடராஜா சுகிர்தராஜ் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.
இம் மாநாட்டில், பாலினச் சிறப்புப் பேச்சுக்களும், ஆய்வுக்கட்டுரைகளும், வாசிப்புக்களும் இடம்பெறவிருக்கின்றன. இந் நிகழ்வில் பல்கலைக்கழகப் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், கல்விசார், கல்விசாரா ஊழியர்கள், வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கான ஆலோசகர்கள், பெண் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட பணியாளர்கள், யாழ்ப்பாண சமூக செயற்பாட்டு மைய பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
கொரோனாப் பெருந் தொற்றுப் பரவலாக்கத்தின் பின்னரான புதிய இயல்பு நிலையில் மாற்றத்தைச் செழுமைப்படுத்துவதற்காக, பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்து பாலின சமத்துவத்துக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த ஆய்வு மாநாட்டை நடாத்துகின்றது. இந்த ஆய்வு மாநாடு பாலினம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு அனுபவப் பகிர்வுக்கான பயனுள்ள களமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பாலின சமத்துவமின்மையின் வெவ்வேறு பரிமாணங்கள் மற்றும் அது தொடர்பான கற்றல் மற்றும் செயல்பாட்டுக்கான உலகளாவிய உரையாடலை வலுப்படுத்துவதனூடாக சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான மாற்றங்கள் பற்றிய அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கும் இந்த மாநாடு வழிசெய்யும் என நம்பப்படுகிறது.
பல்கலைக்கழகம் ஒர் சமூக நிறுவனம் என்பதால், அது சமூகத்தோடு இணைந்து சமூகப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், பாலினம் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடியவர்களை வலுவூட்டுவதிலும் அக்கறை செலுத்துகின்றது. அதன் ஒரு பகுதியாகவே யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையமானது பால்நிலை சார்ந்த பிரச்சனைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கான அறிவினை வெளிப்படுத்துவற்காக ஒரு ஆய்வு மாநாட்டை ஐரோப்பிய ஒன்றிய நிதி அனுசரணையுடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் சீ.டி.எல்.ஜி செயற்றிட்டம் மற்றும் யாழ் சமூக செயற்பாட்டு மையத்துடன் இணைந்து நடாத்துகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்திற்கான நிலையம், பல்கலைக்கழகத்தில் சட்டத்துக்குப் புறம்பான பாகுபாடு மற்றும் துன்புறுத்தலை அகற்றுவதற்கும், அங்கு பணியாற்றுகின்ற ஊழியர்கள் மற்றும் கல்வி கற்கும் மாணவர்களின் உரிமைகள் மதிக்கப்படுகின்ற, வேலை புரிவதற்கும், கற்றலுக்குமான கண்ணியமான சூழலை உருவாக்குவதன் ஊடாகப் பல்கலைக் கழகத்தில் ஆண், பெண் இருபாலாரும் தங்கள் முழுத் திறனை அடைவதற்கான சமத்துவத்தை ஊக்குவிக்கிறது. மேலும், பல்கலைக்கழகத்தில் , கற்பித்தல், கற்றல் ஆராய்ச்சி, மற்றும் தொழில் புரிவதற்கான சிறந்த சூழலை உருவாக்கி பாலினப் பிரச்சினைகளில் விழிப்புணர்வை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. பல்கலைக் கழகத்துக்குள்ளே மட்டுமல்லாமல் அது சார்ந்த சமூகத்திலும் பல விழிப்புணர்வு, மற்றும் வாழ்வாதார வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.
மது, போதைப்பொருள் பாவித்த இளைஞர்கள் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
தோட்டக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று உடற்கூற்று பரிசோதனையின் பின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இருவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உள்படுத்திய போது மதுசாரம் மற்றும் ஐஸ் போதைப்பொருளை பாவித்தமை கண்டறியப்பட்டுள்ளது.
பருத்தித்துறை புலோலி உபயகதிர்காமம் பகுதியில் 24.10.2022 இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பெருநாளான அன்று இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி சட்ட மருத்துவ வல்லுநர் க. வாசுதேவா முன்னிலையில் இருவரது சடலமும் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)