பலவகைச் செய்தித் துணுக்குகள்

மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிக்கின்றோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று (06) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தற்போது முன்வைக்கப்பட்டுள்ள நியாயமற்ற தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதற்கான எமது முடிவை வெளிப்படுத்தும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த நாங்கள் இந்த ஊடக அறிக்கையை வெளியிடுகின்றோம். ஏனெனில், இந்தத் தீர்மானமானது தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரால் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளையும், கொடுமைகளையும் ஊக்குவிக்கும் விதமாகவே அமைந்துள்ளது.

தமிழர்களான நாம் பல்லாண்டு காலமாக மிகப்பெரும் இழப்புகளையும், அழிவுகளையும் சந்தித்துள்ளோம். இந்தத் தீர்மானமானத்தினூடாக ஆகக்குறைந்தது நீதியாவது கிடைக்கும் என்று நம்பியிருந்தோம். ஆனால், இந்தத் தீர்மானத்தால் எங்களின் நம்பிக்கை பொய்த்துப் போயுள்ளது. இந்தத் தீர்மானம், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்கள் பற்றிய எந்த புரிதலையும் வெளிப்படுத்தவில்லை. ஆகக் குறைந்தது தமிழ் மக்கள் எதிர்கொண்ட துன்பங்கள், வேதனைகளை கூட பிரதிபலிக்கவில்லை.

இந்தத் தீர்மானம் பல தசாப்தங்களாக தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களினால் தமிழர்கள் எதிர்கொண்ட கொடுமைகளுக்குத் தீர்வு வழங்கத் தவறிவிட்டது. இந்தத் தீர்மானம் குற்றம் இழைத்தவர்களை பொறுப்பு கூறவைப்பதற்குப் பதிலாக, அவர்களின் சர்வதேச குற்றங்களை வெள்ளை அடிப்பதுடன் அவர்களை பிணை எடுப்பதாகவே அமைத்துள்ளது.

தமது குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய தேவை இல்லை. தாம் தண்டனைக்கு உட்படுத்தப்படமாட்டோம் என உணரும் தமிழர் தாயகம் எங்கும் ஆக்கிரமித்து நிற்கும் அரச படையினர், எதிர்காலத்திலும் தமிழர்களுக்கு எதிராக அட்டூழியங்களைத் தயக்கமின்றி மேற்கொள்வதற்கு இத் தீர்மானம் வழி ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த, ஆயிரக்கணக்கான தமிழரை காணாமல் ஆக்கிய, நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய அதே அரச படையினரே, அவர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மத்தியில் இன்னமும் ஆக்கிரமித்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந்த தீர்மானம், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்த பரிந்துரையை முற்றிலும் புறக்கணித்துள்ளது. இதே பரிந்துரையை அனைத்து முன்னாள் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர்களும், இலங்கைக்கு வருகை தந்து அறிக்கையிட்ட ஒன்பது முன்னாள் ஐ. நா சிறப்பு அறிக்கையாளர்களும் மற்றும் இலங்கை தொடர்பான ஐ.நா நிபுணர்கள் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இதே பரிந்துரையை வலியுறுத்தி உள்ளனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாம் உட்பட பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகம் உட்பட அனைத்து தமிழ் மக்கள் தரப்பினாலும் வலியுறுத்தப்பட்டது. இலங்கையின் அரச படையினராலும், அரசியல் தலைவர்களாலும் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட வன்கொடுமைகளுக்கு நீதியை பெற்றுக்கொள்ளும் ஒரே வழியாக இதனையே எதிர்பார்த்திருந்தோம். ஆனால், இந்தத் தீர்மானம் எங்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் முற்றிலும் புறக்கணித்துள்ளது.

இலங்கை தொடர்பான ஐ.நா.வின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி, போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் பிப்ரவரி 2017 இல், தமிழ்ப் பெண்கள் "பாலியல் அடிமைகளாக" கையாளப்பட்ட இலங்கை இராணுவ "வன்புணர்வு முகாம்கள்" பற்றிய விவரங்களை ஐ.நாவிடம் ஒப்படைத்தது. மேலும், அரச படையினரால் கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

ஐ.நா.வின் மூத்த அதிகாரிகள் மற்றும் பெரும் இழப்பை சந்தித்த தமிழ் சமூகத்தின் பல்வேறு தரப்பினாலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், சமர்ப்பிக்கப்பட்ட இத்தீர்மானம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த தவறியது மட்டுமல்லாது, பாதிக்கப்பட்ட தமிழ் இனத்தின் பெரும் துயரத்தையும் வலிகளையும் புறக்கணித்துள்ளது. ஆகவே இந்த நியாயமற்ற தீர்மானத்தை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம் என்றுள்ளது.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

வழிமறித்து கொள்ளை

மானிப்பாயில் வீதியில் வழிமறித்து கத்தியை காண்பித்து மிரட்டி ஆசிரியரின் நான்கரை பவுண் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த முதலாம் திகதி இரவு 7 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பிரபல பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் வீடு திரும்பிய போதே இந்த வழிப்பறி கொள்ளை கத்திமுனையில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஊரெழு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23, 25 மற்றும் 42 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய சந்தேக நபர்கள் மூவரும் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்களிடமிருந்து நான்கரை தங்கப்பவுண் சங்கிலி மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

ரயில் மோதி இளம் வயதினர் மரணம்

யாழ்ப்பாணம், நீராவியடி பிள்ளையார் பகுதியில் ரயிலுடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்.

இந்தச் சம்பவம் வியாழன் (06) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் ரயிலுடன் மோதுண்டதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இறந்தவர் 30 வயது மதிக்கதக்கவர். 5 அடி உயரமும் பொது நிறம் உடையவர். காற்சட்டை, வெள்ளை ரீசேட் அணிந்திருந்ததுடன், உலப்பனை - வட்டவளை, வட்டவளை - ஹட்டன் சென்ற பயணச்சீட்டு வைத்துள்ளார்.
இவர் கையை காட்டி ரயில் தண்டவாளம் முன் ரயில் வரும்போது நின்றுள்ளார் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

மின்னல் தாக்கி இளைஞன் மரணம்

தெல்லிப்பளை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவர் இன்று வியாழக்கிழமை (06) காலை உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது - 34) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் அம்பனைப் பகுதியில் உள்ள தமது தோட்டத்தில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு உணவைக் கொண்டுசென்ற வேளை தோட்டப் பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது.

தெல்லிப்பளை, காங்கேசன்துறை பகுதிகளில் இன்று வியாழக்கிழமை (06) காலை திடீரென கடும் மழை இடி மின்னலுடன் பெய்திருந்தது.

அவ்வேளையிலையே மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மின்னல் தாக்கி உயிரிழந்த இளைஞருக்குரிய இழப்பீட்டுத் தொகையினை அனைத்து முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடாக பெற்று கொடுப்பதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்

மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவருக்கு அரசினால் வழங்கப்படும் அனர்த்த இழப்பீட்டு நிதியினை பெற்று கொடுப்பதற்குரிய அனைத்து விபரங்களும் தெல்லிப்பழை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் இறப்பு சான்றிதழ் கிடைக்கப்பெற்றதுடன் அரசினால் வழங்கப்படும் இரண்ரரை லட்சம் ரூபா இழப்பீட்டு நிதியினை உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



13 வயது சிறுமி வன்புணர்வில் கர்ப்பம் - 73 வயது வயோதிபர் கைது

இருபாலையில் 13 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 73 வயது முதியவரை பொலிஸார் கைது செய்துள்ளளனர்.

தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வசித்து வந்த 13 வயதுச் சிறுமியே முதியவரால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமாக உள்ளார் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு விடயம் அறிவிக்கப்பட்டது. பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கோப்பாய் பகுதியில் சைக்கிள் திருத்தும் கடை ஒன்றை நடத்தி வரும் முதியவரே கைது செய்யப்பட்டார்.

சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றுள்ள பொலிஸார், அவரை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சேர்த்துள்ளனர்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY