
posted 6th October 2022
எஸ் தில்லைநாதன்
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை திருவடிநிலை கடலிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருவடிநிலை கரையோரமாக அமைக்கப்பட்டுள்ள இறால் தொட்டிலில் சடலம் காணப்பட்டதாகவும் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சடலத்தை அடையாளம் காண்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
நியூசிலாந்து தூதுவர் - யாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் சந்திப்பு
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கேல் ப்பிள்டன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டு துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜவைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு செவ்வாய்க் கிழமை (04) இடம்பெற்றது.
எஸ் தில்லைநாதன்
சிவனருள் பவுண்டேஷன் நிறுவனத்தின் நவராத்திரி விழா
வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய அதிகஷ்ட பிரதேசங்களில் சிவனருள் பவுண்டேஷன் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள இலவச கல்வி நிலையங்களில் சிறுவர் மற்றும் முதியோர் தினமும் நவராத்திரி விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தமிழர்களினால் வளர்க்கப்பட வேண்டிய பாரம்பரிய பண்புகளான பெரியோரை கனம் பண்ணுதல், சிறியோர்களை நல்வழியில் வாழ வழிகாட்டுதல் ஆகிவை இவ் அவசர யுகத்தில் புறம்தள்ளப்பட்டுக் கொண்டே வருகின்றது.
இதனை உணர்ந்த இந்த நிறுவனமானது வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தினை பிரதான பகுதிகளாக கொண்டு அபிவிருத்தியில் பின்தங்கிய அதிகஷ்ட பிரதேச கிராமங்களான திருகோணமலையின் மூதூர் பிரதேசத்தின் நீனாக்கேணி கிராமத்திலும், மட்டக்களப்பின் வவுணதீவு பிரதேசத்தின் காஞ்சிரங்குடா கிராமத்திலும், அம்பாறையின் திருகோயில் பிரதேசத்திலும், வவுனியாவின் ஒலுமடுவிலும், முல்லைத்தீவு விசுவமடுவிலும், மலையகத்திலும், இலவச கல்வி நிலையங்களை உருவாக்கி அங்கு வாழும் மக்களினதும், மாணவர்களினதும் நலன் கருதி இலவச மாலை நேர வகுப்புக்களையும், அறநெறி வகுப்புக்களையும் நடத்தி வருகின்றது.
இந்நிலையிலேயே நாட்டினுடைய அதிகஷ்ட பொருளாதார நிலையிலும் பொதுமக்களை உள்வாங்கி சிறுவர் மற்றும் முதியோர் தினத்தின் உள்ளார்ந்த பொருளை உணர்த்தும் வகையில் சிறுவர் மற்றும் முதியோர் தினத்தினை குறித்த கல்வி நிலையங்களில் மிகவும் சிறந்த முறையில் கொண்டாடியுள்ளது.
அத்துடன் வீரம், செல்வம், கல்வியை வழங்குகின்ற முப்பெரும் தேவிகளை வழிபடும் விரதங்களில் ஒன்றான நவராத்திரி விரதத்தினைச் சிறப்பிக்கும் முகமாக 10 தினங்களும் குறித்த கல்வி நிலையங்களில் பூசை வழிபாட்டு முறைகளை மேற்கொண்டதுடன் பல்வேறு கலாசார நிகழ்வுகளையும் நடத்தியுள்ளது.
குறிப்பாக இந்நிறுவனத்தினால் மாதம் தோறும் மேற்கொள்ளப்படும் மாணவர்களின் கல்வி மதிப்பீடுகளை அடிப்படையாக கொண்டு அதிக புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பரிசுப் பொருட்களாக வழங்கியதுடன் நவராத்திரி விரதத்தின் இறுதி மூன்று நாட்களும் தமிழ் கலாசாரத்தினை மாணவர்களிடையே வளர்க்கும் வகையில் கோலம் போடுதல், மாலை கோர்த்தல், தேவார மனனம் செய்தல், தோரணம் இழைத்தல் போன்ற பல போட்டிகளை நடத்தியதுடன், கலை நிகழ்வுகளையும் நடத்தி குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவித்துள்ளது.
வாஸ் கூஞ்ஞ
பயணிகளுக்குப் பயன்படாத பேரூந்துச் சேவை - தேவையா?
போக்குவரத்து சேவையின் சீர்கேடால் பலதரப்பட்ட பிரயாணிகள் பெரும் பாதிப்பகளுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மரே.மஸ்கெலிய அரச பேருந்து சேவை கடந்த ஒரு வாரமாக இடம் பெறாமையாலேயே இந் நிலை எற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள பயணிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் அரச பேரூந்து சேவை காலை 6.30 மணிக்கு மரே தோட்ட தேயிலை தொழிற்சாலை அருகில் இருந்து ஆரம்பித்து பொரஸ், முள்ளுகாமம், நல்லதண்ணி, லக்சபான, ரிக்காடன் கிராமம், மவுஸ்சாகல, கங்கேவத்த , புரவுன்லோ தோட்ட பிரதான வீதி வழியாக மஸ்கெலியா சென்றடையும்.
இதனால் முன் கூட்டியே அரச பேருந்துக்கு பணம் கட்டி பயண சீட்டு பெற்றவர்கள் மேலும் தனியார் பேருந்துகளுக்கு பணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவ்வாறு பணம் கொடுத்து சென்றாலும் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது என புகார் தெரிவிக்கின்றனர்.
குறிப்பிட்ட அந்த நேரத்துக்கு செல்லும் பேருந்து சாரதி கடந்த ஒரு வாரமாக விடுமுறையில் உள்ளதாகவும் அதற்காக வேறு ஓரு சாரதியை கடமையில் ஈடுபடுத்த ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் சாரதிகள் பற்றாக்குறை காரணமாக இச் சேவை தொடர முடியவில்லை என்றும் தெரியவருக்கின்றது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY