
posted 4th October 2022
தொடர் போராட்டத்தில் குதித்த மீனவர்கள்
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி தொடர் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அலுவலகத்தை நேற்று திங்கட்கிழமை (03) காலை முற்றுகையிட்டு மீனவர்கள் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எரிபொருள் கிடைக்காதமை போன்ற பிரச்சனைகளினால் முல்லைத்தீவில் மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமது நிலைமையை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் சட்டவிரோத தொழிலுக்கு உடந்தையாக உள்ளதாகவும், அவர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
மீனவர்கள் கடற்தொழில் நீரில்வள திணைக்களத்தின் நுழைவாயிலுக்கு அருகில் கொட்டகை அமைத்து மீனவர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மது போதைக் கும்பலால் தாக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்துக்கு முன்பாக உள்ள வீதி வழியாகஞாயிறு (02) இரவு சென்று கொண்டிருந்த நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஓட்டோ ஒன்றில் மதுபோதையில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவினரே மாணவர்களை வழி மறித்துத் தாக்கிவிட்டு அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்கள் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடமையில் தவறியதால் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட உத்தியோகஸ்தர்கள்
பரீட்சை கடமைகளில் இருந்து தவறிய குற்றச்சாட்டுக்காக விசாரணைகள் முடிவடையும் வரை யாழ். பல்கலைக் கழகத் துறைத் தலைவர், விரிவுரையாளர் மற்றும் நிர்வாக உத்தியோகஸ்தர் ஆகிய மூவரையும் பல்கலைக்கழக பேரவை பணி இடை நீக்கம் செய்துள்ளது.
யாழ்.பல்கலைக் கழகத்தில் கடந்த சனிக்கிழமை (01) இடம்பெற்ற பேரவை கூட்டத்தின்போதே மூவரையும் விசாரணைகள் முடிவடையும் வரை பணி இடை நீக்கம் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கலைப் பீட மாணவர்களின் ஒரு துறைக்கான பரீட்சைக்கு வினாத்தாளை தயார் செய்யாத காரணத்தால், பரீட்சைக்கு தோற்ற தயாரான நிலையில் வந்த மாணவர்கள், பரீட்சைக்கு தோற்ற முடியாத நிலையில் திரும்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், பல்கலைக்கழக உயர் அதிகாரிகளால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையில், பேரவை அது தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக மூவரையும் விசாரணைகள் முடிவடையும் வரையில் பணி இடை நீக்கம் செய்வது என தீர்மானித்தது.
இதேவேளை, மாணவர்களுக்கான வினாத்தாளினை தயார் செய்யாது, துறைத் தலைவர், விரிவுரையாளரையும், விரிவுரையாளர், துறைத் தலைவரையும் மாறி மாறி குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனால், இறுதி வரை வினாத்தாள் தயார் செய்யப்படவில்லை. பரீட்சை
வினாத்தாள் தயார் செய்யாது, பரீட்சை கடமையில் இருந்து தவறியதாக துறைத் தலைவர் மற்றும் விரிவுரையாளர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான வினாத்தாள் தயார் செய்யப்படாமை, பரீட்சை நடைபெறாமை ஆகியவை தொடர்பில் நிர்வாக அதிகாரி உரிய தரப்புகளுக்கு உரிய முறையில் அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)